நியுசிலாந்தில் கடந்த வருடம் இரண்டு மசூதிகளில் தாக்குதல்களை மேற்கொண்ட நபர் மூன்றாவது மசூதி மீதும் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நியுசிலாந்தின் மசூதிகளில் தாக்குதல்களை மேற்கொண்ட அவுஸ்திரேலியாவை சேர்ந்த பிரென்டன் டரென்டிற்கு தண்டனை விதிப்பது குறித்த நீதிமன்ற விவாதங்கள் ஆரம்பமாகியுள்ள நிலையிலேயே இந்த தகவல் வெளியாகியுள்ளது.
பிரென்டன் டரென்ட் மசூதிகளை தீக்கிரையாக்கவும் பலரை கொலை செய்யவும் திட்டமிட்டிருந்தார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது
டரென்ட் ஒரு வருடகாலத்துக்கு முன்னரே தாக்குதலுக்கான திட்டங்களை தீட்டிவிட்டார்,அதிகளவான உயிரிழப்புகளை ஏற்படுத்துவதே அவரின் நோக்கம் என அரசதரப்பு சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
அவர் நியுசிலாந்தின் மசூதிகள் குறித்து தகவல்களை திரட்டினார்,பெருமளவானவர்கள் காணப்படும் வேளை தாக்குதலை நடத்துவதே அவரின் நோக்கம் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல்களை மேற்கொள்வதற்கு முன்னரே அவர் கிரைஸ்சேர்ச் சென்று தனது முக்கிய இலக்கின் மீது ஆளில்லா விமானத்தை செலுத்தியிருந்தார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அவர் ஆஸ்பேர்ட்டன் மசூதியிலும் தாக்குதலை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார் ஆனால் அவரால் அங்கு செல்ல முடியவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மசூதிகளில் தாக்குதல்களை மேற்கொண்ட பின்னர் அவற்றை தீயிட்டுகொழுத்துவதே தனது நோக்கம் என பிரென்டன் டரென்ட் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளார்.
