Our Feeds


Tuesday, August 11, 2020

www.shortnews.lk

பாடசாலைகளை திறக்க முக்கியத்துவம் அளிக்க வேண்டும் - WHO விஞ்ஞானி

 


கொரோனா பரவலுக்கு மத்தியில் பாடசாலைகளைத் திறக்க முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என WHO -வின் மூத்த விஞ்ஞானி தெரிவித்துள்ளார்.


கொரோனா வைரஸ்

சீனாவின் வுகான் நகரில் முதன்முதலாக கொரோனா வைரஸ் வெடித்த பிறகு, பெரும்பாலான நாடுகளில் இன்னும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளது. அதிலும் குறிப்பாகக் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாகப் பாடசாலைகள் திறக்கப்படாமல் உள்ளன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுகிறது, சில பாடசாலைகள் ஆன்லைன் மூலம் பாடம் நடத்தினாலும், இணையம் இல்லாத மாணவர்களின் நிலை மோசமாக உள்ளது.


 அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் ஆகியோர் மீண்டும் பாடசாலைகளைத் திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.


இந்நிலையில் உலக சுகாதார நிறுவனமும் இதே கருத்தைத் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்துக்குப் பேட்டியளித்துள்ள WHO-வின் மூத்த விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன், “கொரோனாவுக்கான அதிகாரப்பூர்வமான தடுப்பூசி இன்னும் வெளியிடப்படாத நிலையில் அரசுகள் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்ந்து கண்காணித்துத் தனிமைப்படுத்த வேண்டும். தற்போதைய சூழலில் பாடசாலைகள் திறக்கப்படுவதற்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.


குழந்தைகளின் கல்வியைத் தவறவிடாமல் அதே நேரம் அவர்களின் ஆரோக்கியத்துக்கும் எந்த பாதிப்பும் இல்லாமல் பாடசாலைகள் திறக்கப்படவேண்டும். பாடசாலைகள் முழுமையாகக் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்யப்படவேண்டும். அதேபோல் மாணவர்களுக்கான சுகாதாரம், கழிப்பறை வசதிகள், தனிமனித இடைவெளி ஆகியவற்றைப் பாடசாலை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்’ எனத் தெரிவித்துள்ளார்.



பாடசாலைகள் திறக்கப்பட வேண்டும் என்பதற்கான காரணம் பற்றிப் பேசியுள்ள சௌமியா, “கொரோனா காலத்தில் ஏற்பட்டுள்ள இந்த இடையூறுகள் குழந்தைகளின் கற்றல் திறனில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் பாடசாலைகளைத் திறப்பதற்கு அதிக முன்னுரிமை வழங்க வேண்டும். பல லட்சக்கணக்கான ஏழை மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ளும் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. எனவே அவர்கள் நீண்ட காலமாகப் பாடசாலைகளுக்கு வராமல் இருந்தால் அது அவர்களின் கல்வி இடை நிற்றலுக்கு வழிவகுக்கும். கல்வி இழப்பைத் தவிரக் குழந்தைக்குச் செய்யும் பெரிய துஷ்பிரயோகம் எதுவும் இல்லை.


அதுவே பெண் குழந்தைகள் திருமணம், வன்முறை போன்ற அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்கின்றனர். பல இடங்களில் கொரோனா பரவல் உச்சத்தில் இருக்கும்போது பாடசாலைகள் திறக்கப்படுவதற்குத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் இப்போதிலிருந்து செய்ய வேண்டும். முதலில் கொரோனா பாதிப்பு மிகவும் குறைவாக உள்ள மாவட்டங்களில் குறைந்த நேரத்தில் பள்ளிகள் இயங்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »