பேருவளை மற்றும் திகன போன்ற இடங்களில் இடம்பெற்ற அமைதியின்மையின் போது பலியானவர்களுக்கு வழங்கப்பட்ட நட்டஈட்டு தொகையை விட குறைந்தளவான நட்டஈடே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் போது உயிரிழந்தவர்களுக்கு வழங்கப்பட்டதாக இழப்பீட்டுத் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் எஸ்.எம்.பதியுதீன் ஜனாதிபதி ஆணைக்குழு முன் சாட்சியம் அளித்துள்ளார்.
இழப்பீட்டுத் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் எஸ்.எம்.பதியுதீன் நேற்று (16) உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்னிலையாகி சாட்சியம் வழங்கினார்.
அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் லக்ஸ்மன் கிரியெல்ல, ரவூப் ஹக்கீம் ஆகியோர் திகன சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு இரண்டு மில்லியன் ரூபாவை நட்டஈடாக வழங்க கண்டி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் முடிவு செய்திருந்தாலும், அதன் பின்னர் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபா மட்டுமே நட்டஈடாக வழங்கப்பட்டுள்ளதாக இழப்பீட்டுத் திணைக்களத்தின் பதில் பணிப்பாளர் எஸ்.எம்.பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிசாரா ஜயரத்னவும் நேற்று பிற்பகல் தாக்குதல் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலில் பிரிவில் வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.
நேற்று ஜனாதிபதி ஆணைக்குழு உத்தரவிற்கு அமையவே அவர் வாக்மூலம் வழங்கியுள்ளார்.
இவரின் வாக்குமூலம் தொடர்பில் இன்று அரச சிரேஸ்ட சட்டத்தரணியிடம் வாக்குமூலம் பதிவுச் செய்யப்படவுள்ளமையும் குறிப்பிடதக்கது.
