Our Feeds


Thursday, December 10, 2020

www.shortnews.lk

மீண்டும் ஒரு சம்பவம்: சீரற்ற பாதை காரணமாக அம்பியூலன்ஸில் ஏறுவதற்கு 600 மீற்றர் தூரம் நடந்து சென்ற கொரோனா தொற்றாளர்!

 





(கலஹா நிருபர்)

கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஸ்டலன்ட்பேர்க் அப்பர் டிவிசன் பிரிவில் 46 வயதான பெண் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


கம்பஹா மாவட்டத்தின் களனி பிரதேசத்தில் தொழில் புரிந்த இந்தப் பெண்ணிடம் கடந்த 7ஆம் திகதி பிசிஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன. இதன் முடிவுகள் வெளிவரும்வரை தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும் என சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

எனினும், சுகாதார அதிகாரிகளின் உத்தரவையும் மீறி இப்பெண் அங்கிருந்து ஊருக்குச் சென்றுள்ளார். தனது தாய் உயிரிழந்து விட்டதால் இறுதிக் கிரியைகளில் பங்கேற்பதற்காக தனது கணவருடன் 8 ஆம் திகதி வாடகை ஆட்டோவிலேயே அவர் சென்றுள்ளார். அத்தோட்டத்தில் உள்ள பலரும் மரண வீட்டுக்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில், 9 ஆம் திகதி பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வந்த நிலையில் அப்பெண்ணுக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த பெண்ணுடன் நேரடி தொடர்பிலிருந்த 6 குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மரண வீட்டுக்கு வந்து சென்றவர்களின் விபரங்களும் தற்போது திரட்டப்பட்டு வருகின்றன.

தொற்றுக்குள்ளான அவர் பெனிதெனிய பகுதியில் உள்ள கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

ஸ்டலன்பேர்க் அப்பர் டிவிசன் பிரிவுகளுக்கு செல்லும் பிரதான பாதை குண்டும் குழியுமாக காணப்படுவதால் கொரோனா தொற்றாளர் இருக்கும் இடத்துக்கு வாகனத்தை கொண்டு செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் சுமார் 600 மீற்றர் வரை நடந்து வந்தே அன்பியூலன்ஸ் வண்டியில் ஏறியுள்ளார்.

இதுபோன்ற மற்றொரு சம்பவமும் அண்மையில் பெருந்தோட்டப் பகுதியில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »