Our Feeds


Saturday, December 26, 2020

www.shortnews.lk

கொரோனா ஜனாஸாக்களை எரிக்கும் இலங்கை அரசின் முடிவு பகுத்தறிவற்றது - உலகத் தமிழர் பேரவை

 



(நா.தனுஜா)


கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் அனைவரினது சடலங்களையும் கட்டாயமாகத் தகனம் செய்யவேண்டும் என்ற இலங்கையின் கொள்கைக்கு உலகத் தமிழர் பேரவை கண்டனம் வெளியிட்டிருக்கிறது.


அத்தோடு அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள இந்த பகுத்தறிவற்றதும் பாரபட்சமானதுமான கொள்கை மீண்டும் நீக்கப்படுவதற்கு தம்மால் இயன்ற அனைத்தையும் செய்வதற்கு அனைத்து சமூகங்களினதும் அரசியல் தலைவர்கள் முன்வரவேண்டும் என்று அவ்வமைப்பு வலியுறுத்தியிருக்கிறது.

இதுகுறித்து உலகத் தமிழர் பேரவையினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்ககையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

தொற்றினால் உயிழப்போரின் சடலங்களைக் கட்டாயமாகத் தகனம் செய்வதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டிருக்கும் தீர்மானம், முஸ்லிம் மற்றும் கத்தோலிக்க சமூகத்தினரின் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு அச்சமூகத்தினரின் மதரீ தியான நம்பிக்கையை மீறிச் செயற்படுவதற்கு நிர்பந்திப்பதென்பது மிகவும் மோசமானதும் மனிதாபிமானமற்றதுமான செயலாகும்.

அண்மைய காலங்களில் முஸ்லிம் சமூகம் வன்முறைக்கும் பாரபட்சத்துக்கும் உட்படுத்தப்பட்டு வந்திருப்பது இரகசியமான விடயமல்ல. முஸ்லிம் சமூகத்தை இலக்குவைத்து எவ்வளவு பாகுபாடு காண்பிக்கப்படுகின்றதோ, அந்தளவுக்கு வலுவான தேசியவாதக் கொள்கையாளர்களின் ஆதரவைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று தற்போதைய ஆளுந்தரப்பைச் சேர்ந்த சிலர் கருதுகின்றார்கள்.

இந்நிலையில் பாரபட்சம் மற்றும் சகிப்புத்தன்மையின்மை ஆகியவற்றின் படுகுழியில் இலங்கை வீழ்வதைத் தடுக்கவேண்டுமாயின், கொள்கையின் அடிப்படையில் இயங்கும் குடிமக்கள் தமது இன மற்றும் அரசியல் நிலைப்பாடுகளைப் புறந்தள்ளி, இதுவிடயத்தில் தமது பங்களிப்பை வழங்க வேண்டியது அவசியமாகும்.

சமுதாயத்தில் இந்த உன்னதமான மாற்றத்தை அடைந்துகொள்வதற்கு பெரும்பான்மையினரின் பங்களிப்பு இன்றியமையாததாகும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »