Our Feeds


Thursday, December 10, 2020

www.shortnews.lk

ஜனாஸா அடக்கத்திற்கு மறுப்பது அடிப்படைவாதிகளை தூண்டும் நடவடிக்கை - ஹக்கீம்

 


 

(ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்)


கொரேனாவினால் மரணித்தவர்களில் முஸ்லிம்களின் 21 சடலங்கள் இதுவரை பொறுப்பேற்காமல் இருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வெளிவந்துள்ளன. இது பாரிய பிரச்சினையாக விரிவாகலாம். அரசாங்கத்தின் தீர்மானத்தினால் முஸ்லிம்கள் பாரிய மன அழுத்தத்துக்கு ஆளாகி இருக்கின்றனர். இந்த விடயத்தில் அரசாங்கம் கடும்போக்கு கொள்கையில் இருந்து மீளவேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இன்று (10) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.


வைரஸ் தொடர்பான பல நிபுணர்கள் நாட்டில் இருக்கின்றனர். அடக்கம் செய்வதால் வைரஸ் பரவுவது தொடர்பில் எந்த ஆய்வும் உறுதிப்படுத்தி இல்லை என்றே அனைவரும் தெரிவிக்கின்றனர். இந்த சபையில் இருக்கும் வைரஸ் தொடர்பான நிபுணர் பேராசிரியர் திஸ்ஸ விதாரணவும் இந்த நிலைப்பாட்டிலேதான் உள்ளார். சுகாதார அமைச்சின் தொழில் நுட்ப குழுவின் தீர்மானம் பெரும் கலவரத்தை ஏற்படுத்தக் கூடியதாகும். அதனால் இதுதொடர்பாக அரசாங்கம் கரிசனை காட்டவேண்டும்.

அத்துடன் முஸ்லிம்களின் சடலங்களை அடக்கம் செய்ய அனுமதிக்காமல் இருப்பது அடிப்படைவாதிகளை தூண்டும் நடவடிக்கையாகும். இதற்கு இடமளிக்காது, இதுதொடர்பான சட்டத்தை மாற்றியமைக்க வேண்டும் என்றார்.

இதன்போது இஷாக் ரஹ்மான் எம்பி கருத்துத் தெரிவிக்கையில் பிறந்து 20 நாளே ஆன குழந்தைக்கு கொரோனா என தெரிவித்து, உலகமே பார்த்துக்கொண்டிருக்கையில் எரித்துள்ளனர். ஆனால் குழந்தையின் தாய்க்கும் தந்தைக்கும் கொரோனா தொற்று இல்லை. இது மிகவும் மனவேதனையை அளிக்கின்றது. எரிக்கப்பட்ட குழந்தையின் பேரிலாவது எமக்கு நிவாரணம் நடவடிக்கை எடுக்கவேண்டும். என்றார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் எழுந்த சபை முதல்வரும் அமைச்சருமான தினேஷ் குணவர்த்ன, இந்த விடயம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு வருகிறது. அடுத்த நாடாளுமன்ற அமர்வில் இதுதொடர்பாக பதில் ஒன்றை பெற்றுக்கொடுப்போம் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »