கொரோனா தொற்றால் இறக்கும் முஸ்லீம்களின் ஜனாசாக்களை தகனம் செய்வதால் சமூகத்தினரால் தொடர்ந்து கவலை எழுந்ததையடுத்து கொரோனா தொற்றால் இறக்கும் முஸ்லிம்களின் உடல் அடக்கம் செய்ய மாலைத்தீவு அரசு முன்வந்துள்ளது என்று டெய்லி மிரர் பத்திரிகை செய்திவெளியிட்டுள்ளது.
முஸ்லிம்கள் உயிரிழந்தால் தகனம் செய்வது அவர்களின் மத நம்பிக்கைகளுக்கு எதிரானது என்று முஸ்லிம் சமூகம் குற்றம் சாட்டிவருகின்றனர்.
டெய்லி மிரர் படி, மாலைதீவு அரசு இலங்கை வெளியுறவு அமைச்சகத்திற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் தனது வாய்ப்பினை வழங்கியுள்ளது.
சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்தா ஹேரத் கூறுகையில்,
இதற்கு விரைவில் ஒரு பதிலை அனுப்பும் வகையில் வழிகாட்டுதல்களை உருவாக்கி, அத்தகைய கோரிக்கையின் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயுமாறு வெளியுறவு அமைச்சு சுகாதார அமைச்சுக்கு தெரிவித்துள்ளது.
மாலைதீவில் பல தீவுகள் உள்ளன என்பதை சுட்டிக்காட்டிய வைத்தியர் ஹேரத், கொரோனா தொற்றால் உயிரிழந்தோரை அடக்கம் செய்வது தொடர்பில் இலங்கை போன்று எந்தவொரு பிரச்சினையையும் நாடு எதிர்கொள்ளவில்லை என்றார்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை அடக்கம் செய்வதற்கு ஒரு தீவை ஒதுக்க மாலைதீவு அரசு முன்மொழிந்துள்ளது, இதன் விளைவாக, சுகாதார அமைச்சு இதுபோன்ற ஒரு செயல்முறையில் நடைமுறை குறித்து ஆய்வு செய்யும்.
இதற்கான சாத்தியக்கூறு ஆய்வு முடிந்ததைத் தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
அண்மையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இறக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்ய இலங்கைக்குள் குறைந்த நீர்மட்டம் கொண்ட நிலத்தை தேடுமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த வாரம் சுகாதார நிபுணர்களிடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
-S.நிரூஜன்-
