Our Feeds


Wednesday, December 23, 2020

www.shortnews.lk

ஜனாஸாவை எரித்து, முஸ்லிம்களின் உரிமையை அரசு குழிதோண்டி புதைக்கக் கூடாது - ஞானசார தேரர்

 



(நா.தனுஜா)

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் முட்டாள்தனமான தீர்மானத்தின் பின்னணியில் பௌத்த தேரர்கள் இருப்பதாகவே பலரும் கருதுகின்றார்கள். ஆனால், அது உண்மையல்ல என்று பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.


1983 ஆம் ஆண்டில் தமிழர்களின் பிரச்சினை ஒன்றைத் தோற்றுவித்துக் கொண்டதைப் போன்று, மீண்டும் இந்த விவகாரத்தின் ஊடாக மற்றொரு பிரச்சினையை தோற்றுவிக்கும் வகையிலேயே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அரசாங்கம் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, முஸ்லிம்களின் உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.

பொது பலசேனா அமைப்பினால் கொழும்பில் நேற்று (22)  ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுவதை எதிர்த்து அண்மையில் லண்டனில் ஆர்ப்பாட்டம் மேற்கொற்கொள்ளப்பட்டது. அதில் ‘இலங்கையில் காவித்துணி அணிந்தவர்களின் பேச்சை ஜனாதிபதி கேட்கக்கூடாது’ என்று ஒருவர் கூறுகின்றார். இதன்மூலம் வெளிப்படுவது என்ன? இந்த நாட்டில் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதை பௌத்த பிக்குகள் எதிர்க்கிறார்கள் என்ற அர்த்தத்தை அல்லவா அது ஏற்படுத்துகிறது?

இங்கு பௌத்த பிக்குகள் எவரும் வைரஸ் தொடர்பில் விஞ்ஞான ரீதியில் தேர்ச்சி பெற்றவர்களல்ல. நாம் இது குறித்து கருத்து வெளியிடவுமில்லை. ஆனால், தற்போது முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதை பௌத்த பிக்குகளே எதிர்க்கின்றார்கள் என்றே மக்கள் கருதுகின்றார்கள். அதன் விளைவாக நாம் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினதும் வெறுப்புக்கு ஆளாக வேண்டியிருக்கிறது. மாறாக அரசியல்வாதிகளுக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.

இந்த அரசாங்கம் மேற்கொள்ளும் முட்டாள்தனமான தீர்மானங்களினால் இத்தகைய விளைவுகளே ஏற்படுகின்றன. நாம் முஸ்லிம்களின் உரிமைகள் மற்றும் மத ரீதியான நம்பிக்கையின் மீது மண் போடக்கூடாது. அண்மைக் காலத்தில் ஷரியா சட்டம், ஹலால், காதி நீதிமன்றம், இஸ்லாமிய அடிப்படைவாதப் போக்குகள் தொடர்பில் எதுவும் பேசப்படவில்லை. ஆனால் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்வது தொடர்பில் இன ரீதியான தீர்மானம் மேற்கொள்ளப்படுகிறது.

இதுவிடயத்தில் எவ்வித முறையான செயற்திட்டமும் நடைமுறைப்படுத்தப்படுவதாகத் தெரியவில்லை. தகுதிவாய்ந்த நிபுணர்கள் குழுவை நியமித்து, அவர்களின் பரிந்துரைகளைக் கேட்டறிய வேண்டும். அதேபோன்று இவ்விகாரத்தில் மதத்தலைவர்களின் கருத்துக்களையும் கேட்டறிய வேண்டும்.

ஆகவே தனி நபர்களின் நிலைப்பாடுகளைக் கவனத்திற்கொள்ளாமல், இது குறித்து அரசாங்கம் பரந்துபட்ட ரீதியில் சிந்திக்க வேண்டும். ஏனெனில் இந்த பூமியிலிருந்து முக்தியை பெறுவதற்கு நிலத்துக்குக் கீழ் புதைக்கப்பட வேண்டும் என்று முஸ்லிம்கள் நம்புகின்றார்கள். எனவே வரையறுக்கப்பட்ட அடிப்படையில் தீர்மானம் மேற்கொள்ள முடியாது. அரசாங்கம் இஸ்லாமிய அடிப்படைவாதத்தை இல்லாதொழிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமே தவிர, முஸ்லிம்களின் உரிமைகளைக் குழிதோண்டிப் புதைக்கக் கூடாது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »