அரசாங்கத்துக்கு எதிராக கருத்துக்களை பரிமாறும் சமூக வலைத்தளங்களை ஒழிப்பதற்கான சட்டங்களை இலங்கையில் கொண்டுவருவதற்கான அவசரத்தில் அரசாங்கம் அதற்கான முன்னெடுப்புக்களை செய்து வருகின்றது.
இது ஒரு ஜனநாயக நாட்டிலே மிகவும் ஆபத்தான ஒரு முயற்சி என்பதனையும் கருத்துச் சுதந்திரத்தை மீறும் செயல் என்பதனையும் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
2009ம் ஆண்டில் நாட்டிலிருந்த 33 வருட பயங்கரவாத யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டபோது அப்போதைய ஜனாதிபதி யுத்தவெற்றியின் பின் நாட்டு மக்களுக்கு பேசியபடி நாட்டிலே பெரும்பான்மை சிறுபான்மை என்ற வேறுபாடில்லாமல் "நாட்டுக்கு பற்றுள்ளவர்கள்" "நாட்டுக்கு துரோகமானவர்கள்" என்கிற கோட்பாட்டில் முன்னோக்கி செல்வோம் என்று கூறிய விடயத்தை சரியாக செய்திருந்தால் இந்நாடு நல்ல நிலைக்கு சென்றிருக்கும் மாறாக இன்று சாக் நாடுகளின் பட்டியலில் ஆப்காணிஸ்தானுக்கு மட்டுமே முன்னால் இருக்கிறது.
மீண்டும் 2012ம் ஆண்டிலிருந்து முஸ்லீம் மக்களுக்கு எதிராக இனவாத செயற்பாடுகள் சமூக வலைத்தளங்களில் கட்டுப்பாடுகளின்றி அரசியல் அனுசரணையுடன் முன்னெடுக்கப் பட்டபோது இவ்வாறான சமூக வலைத்தளங்களுக்கு சட்டங்களை உருவாக்கி கட்டுப்பாடுகளை உருவாக்கியிருந்தால் இங்கு இனவாத, தீவிரவாத, பிரிவினைவாத சக்திகள் தலைதூக்கி இருக்காது ஆனால் இவை அனைத்தும் அரசாட்சியை கைப்பற்ற ஒரு சக்தியாகவும் குறுகிய குறிக்கோள்களை அடைந்துகொள்ள பாவிக்கப்பட்டாலும் இன்றும் அதேவகையில் இனவாத செயற்பாடுகள் கட்டுப்பாட்டை மீறி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ஆனால் அதனைக் கட்டுப்படுத்த அரசுக்கு எந்த தேவையும் இல்லை என்பது கவலைக்குரியதே.
இவ்வாறு அரசாங்கம் பயன்படுத்தப் போகும் சமூக வலைத்தளச் சட்டம் மிகவும் கடுமையான ஒரு அடக்குமுறை ஆகும். இதன் மூலம், அரசாங்கத்திற்கு எதிரான கருத்துக்களை வெளிப்படுத்தும் விமர்சன வலைத்தளங்களை அடக்க முடியும், அவற்றைப் பராமரிக்கும் நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் கடுமையாக தண்டிக்கப்படலாம்.
சமூக ஊடகங்களும் இணையமும் இந்த நேரத்தில் அரசாங்கத்தின் மீது பொதுமக்களின் அதிருப்தியை வெளிப்படுத்தும் ஒரு முக்கியமான ஊடகமாகும் எனவே இதுபோன்ற அடக்குமுறை சட்டங்கள் மூலம் இணைய வர்ணனையாளர்களைதடுக்க அரசாங்கம் தற்போது தயாராகி வருகிறது.
ஹிதாயத் சத்தார்
முன்னாள் உறுப்பினர் - மத்திய மாகாண சபை
