ஒரு தாய், தன்னுடைய
இளம்வயது மகனிடம் தன்னுடைய புற்றுநோய் காரணமான தனது கடைசி நாள்களை எண்ணிவருவதை
பற்றி பேசும் ஒரு உணர்வுபூர்வமான ட்வீட், இணைய
பாவனையாளர்களின் கவனத்தை ஈர்த்து கலங்கடித்திருக்கிறது.
கனடாவின் கான்கார்டியா பல்கலைக்கழகத்தின் நரம்பியல்
விஞ்ஞானியாகவும் இணை பேராசிரியராகவும் இருப்பவர் டாக்டர் நாடியா சவுத்ரி. இவர்தான்
ட்விட்டரில் மேற்சொன்ன பதிவை இட்ட அந்தத் தாய். நாடியா சவுத்ரிவுக்கு, கருப்பை
புற்றுநோய் இருப்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் தொடர் சிகிச்சை
பெற்று வருகிறார். இந்த நிலையில், சில
நாட்கள் முன் புற்றுநோயால் தான் தவித்து வரும் விஷயத்தை தனது சிறுவயது மகனிடம்
கூறப்போவதாக ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
தன் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துகொண்டு அதனுடன், “இன்று நான் என் மகனிடம் புற்றுநோயால் நான் இறந்து கொண்டிருக்கிறேன் என்று சொல்லப் போகிறேன். அவனிடம் சொல்லும் கட்டத்தை எனக்கு ஏற்பட்டிருக்கும் நோய் அடைந்துவிட்டது. எனது கண்ணீர் அனைத்தும் இப்போதே தீர்ந்துவிடட்டும். அப்போதுதான் பிற்பகலில் அவனிடம் நான் தைரியமாக பேசமுடியும்.
எனது மகனை ஆறுதல்படுத்துவற்காக இப்போதே எனது துக்கத்தை கலைத்து வருகிறேன்” என்று பதிவிட்டிருந்தார். இந்த ட்வீட் உடனடியாக வைரலாகி பலரின் கவனங்களை ஈர்த்து கலங்கடித்தது.இதற்கடுத்த மறுநாள், மீண்டும் தன் மகனுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, “எங்கள் இதயங்கள் உடைந்தன. நாங்கள் நிறைய அழுதோம். பின்னர் சிகிச்சை முறை தொடங்கியது. என் மகன் தைரியமானவன், பிரகாசமானவன். இப்போது அவனுக்கு அனைத்தும் தெரிந்துவிட்டது. அதனால் சரியான நிலையில் இருக்கிறான். நான் எங்கிருந்தாலும் அவன் வளர்வதை நான் பார்ப்பேன். இன்று என் வாழ்க்கையின் கடினமான நாள். இந்த நாளில் எங்கள் மீது அன்பு செலுத்திய உங்கள் அனைவருக்கும் நன்றி” என்று தன் மகனிடம் விஷயத்தை சொல்லியதை பகிர்ந்துகொண்டார்.

