பாலஸ்தீன மக்களுக்கு எதிராக நடத்தப்படும் தாக்குதல் தொடர்பில் தாம் கவலையடைவதாகவும், தாம் என்றும் பாலஸ்தீன மக்களுடன் இருப்பதாகவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இலங்கைக்கான பாலஸ்தீன தூதுவர் கலாநிதி தார் ஹம்தல்லாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாலஸ்தீனத்தில் நடப்பவை கவலையளிக்கின்றன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இலங்கை மக்கள் சார்பில் எமது அனுதாபங்களை தெரிவிக்கிறோம். பாலஸ்தீனத்திற்கான இலங்கையின் ஒருமைப்பாட்டை மீளவும் உறுதிப்படுத்துகிறோம். எனவும் பிரதமர் இலங்கைக்கான பலஸ்தீன தூதுவரிடம் தெரிவித்தார்.
இலங்கை தொடர்ந்தும் பலஸ்தீனத்திற்கு ஆதரவாகவே சர்வதேச மட்டத்தில் செயல்பட்டு வருவதுடன் தற்போதைய இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் ஜனாதிபதியாக செயல்பட்ட காலத்தில் இலங்கை சார்பில் பாலஸ்தீனத்தில் பிரதான வீதியொன்று நிர்மானித்துக் கொடுக்கப்பட்டதுடன், அதற்கு மஹிந்த ராஜபக்ஷ பிரதான வீதியென பெயரிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத் தக்கதாகும்.


