காசாவில் சர்வதேச ஊடக அலுவலகங்களின் மீது இஸ்ரேல் நடத்திய வான் வழித் தாக்குதல்கள் குறித்து தாம் மிகவும் அதிருப்தி அடைந்திருப்பதாக, ஐ.நா பொதுச்செயலாளர் அன்டோனியோ கூட்டரெஷ் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. செய்தித் தொடர்பாளர் ஒருவர் வெளியிட்டுள்ள அன்டோனியோ கூட்டரெஷின் அறிக்கையில், "அண்மையில், ஹமாஸ் தலைவர் ஒருவரைக் குறி வைத்து நடத்தப்பட்ட இஸ்ரேலிய தாக்குதலில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த பத்து பேர் பலியான சம்பவம் குறித்து ஐ.நா பொதுச்செயலாளர் மிகுந்த கவலை அடைந்துள்ளார். இந்த மோதலில் பலியாகும் பாலத்தீனர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது குறித்தும் அவர் கவலை கொண்டுள்ளார்" என்று கூறப்பட்டுள்ளது.
ஊடக நிறுவனங்களின் கட்டடத்தின் மீதான சமீபத்திய தாக்குதலுடன் சேர்த்து, அல் ஜாலா என்ற குடியிருப்புப் பகுதி கட்டடமும் தாக்கப்பட்டது, அவரை மேலும் கவலையடையச் செய்துள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.
கடந்த சனிக்கிழமை, காசாவில் அமைந்துள்ள அல்-ஜாலா என்ற 12 மாடி கட்டடத்தை இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் மூலம் இடித்துத் தரைமட்டமாக்கியது.
ஹமாஸ் என்ற போராளிகள் குழுவின் அலுவலகம் அந்தக் கட்டடத்தில் இயங்கி வந்ததாக இஸ்ரேல் கூறுகிறது. கட்டடத்தின் உரிமையாளர் இதை மறுக்கிறார். அந்த கட்டடத்தில் அல்-ஜசீரா, ஏ பி மற்றும் பிற ஊடக நிறுவனங்களின் அலுவலகங்கள் இருந்தன என்று அவர் குறிப்பிடுகிறார்.
கடந்த ஆறு நாட்களில், 100க்கும் மேற்பட்ட ஹமாஸ் அமைப்பைச் சேர்ந்த இடங்களைக் குறி வைத்துச் சுமார் பத்துக்கும் மேற்பட்ட ஹமாஸ் தலைவர்களைக் கொன்றுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் கூறுகிறது.
பொதுச் செயலாளர் அன்டோனியோ கூட்டரெஷ் தனது அறிக்கையில், "சாதாரண குடிமக்களை குறி வைத்து ஊடகங்களைத் தாக்குவது போர்க்குற்றங்கள் என்ற பிரிவின் கீழ் வருகிறது. இத்தகைய செயல் நிச்சயம் தவிர்க்கப்பட வேண்டும்," என்று கூறியுள்ளார்.
இது வரை உயிரிழப்பு 145க்கும் மேல்
காசா, மேற்குக் கரை மற்றும் எருசலேமில் திங்கள்கிழமை முதல் வன்முறை மோதல்களில் இதுவரை 41 குழந்தைகள் உட்பட 215க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்கள், இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்களில் அல்லது ராணுவ நடவடிக்கைகளில் கொல்லப்பட்டுள்ளனர்.
இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகப் பாலஸ்தீன மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தற்போதைய மோதல், 2014க்குப் பிறகான மோதல்களில் மிகவும் மோசமான வன்முறை மோதல் என்று கூறப்படுகிறது.
பாலத்தீன ஆயுதக் குழுக்களும் இஸ்ரேலைத் தாக்கி வருகின்றன. திங்கட்கிழமை முதல் ஹமாஸ் குறைந்தது 2,300 ராக்கெட்டுகளை இஸ்ரேலை நோக்கிச் செலுத்தியதாகக் கூறப்படுகிறது, இதன் காரணமாக ஒரு குழந்தை மற்றும் ஒரு வீரர் உட்பட 12 இஸ்ரேலியர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஹமாஸின் ராக்கெட் தாக்குதலில் 560 க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் காயமடைந்துள்ளனர். இருப்பினும், இஸ்ரேலிய வான் பாதுகாப்பு அமைப்பின் திறமையால் இந்த எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது. ஏனெனில் அந்த அமைப்பு ஹமாஸால் வானத்தில் ஏவப்பட்ட ராக்கெட்டுகளை அழிக்கும் திறனைக் கொண்டுள்ளது.
இந்நிலையில், இஸ்ரேலுக்கும் பாலத்தீனர்களுக்கும் இடையிலான தற்போதைய பதற்றம் குறித்து விவாதிக்க வரும் ஞாயிற்றுக்கிழமை ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சில் கூட்டம் நடைபெற உள்ளது, அதன் பின்னர் இந்த விவகாரத்தில் சில முக்கியமான அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் கூட்டம்.
நியூயார்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செளதி அரேபியாவின் நிரந்தர பிரதிநிதி அப்துல்லா அல் மௌலாமி, ஐக்கிய நாடுகள் சபைக்கான சீனாவின் நிரந்தர தூதுக்குழுவைச் சந்தித்தார். மே மாதம் முழுவதும் சீனா தான் பாதுகாப்பு கவுன்சிலுக்குத் தலைமை தாங்குகிறது. ஐக்கிய நாடுகள் சபையில் பாலத்தீன பிரச்னையில் அரபு நாடுகளின் நடவடிக்கைக்கு செளதி அரேபியா முன்னிலை வகிக்கிறது.
இந்தச் சிறிய குழுக்களுக்கு இடையேயான கூட்டங்களின் நோக்கம் பாலத்தீனர்களுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்து பாதுகாப்பு கவுன்சிலுக்குத் தெரிவிப்பதாகும்.
குறிப்பாக, அண்மைக் காலங்களில் வன்முறைத் தாக்குதல்களில் மக்கள் உயிரிழந்தது குறித்து எடுத்துக்கூறி, சர்வதேச சமூகம் குடிமக்களைப் பாதுகாக்கும் கடமையை நிறைவேற்ற வலியுறுத்துவது இதன் நோக்கமாகும்.
இந்தக் கூட்டத்தில் செளதி அரேபியாவின் ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர தூதுக்குழுவின் சிறப்பு அரசியல் குழு அதிகாரி பைசல் அல்-ஹக்பானியும் கலந்து கொண்டார்.
