Our Feeds


Saturday, May 22, 2021

SHAHNI RAMEES

சீன மொழிக்கு முன்னுரிமை : தமிழ் புறக்கணிப்பு – செந்தில் தொண்டமானின் அதிரடி நடவடிக்கை

 

    துறைமுக நகர், சட்ட மாஅதிபர் திணைக்களம் உள்ளிட்ட பல பகுதிகளில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, சீன மொழி உள்வாங்கப்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபத் தலைவரும், பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.

நீதி அமைச்சர் அலி சப்ரிக்கு இன்று (22) அதிகாலை தொலைபேசியூடாக தொடர்புக் கொண்டு, தனது எதிர்ப்பை வெளியிட்டதாக பிரதமரின் இணைப்புச் செயலாளருமான செந்தில் தொண்டமான், ட்ரூ சிலோன் செய்திப் பிரிவிற்கு தெரிவித்தார்.

இலங்கையின் மிக பிரதான அலுவலகமாக திகழும் சட்ட மாஅதிபர் திணைக்களத்தில், தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, சீன மொழி உள்வாங்கப்பட்டுள்ளமை மிகவும் ஆபத்தான விடயம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், சீன தூதரகத்தினால் தொடர்ச்சியாக தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, சீன மொழி உள்வாங்கப்படுகின்றமை குறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு, தான் நீதி அமைச்சர் அலி சப்ரியிடம், கேட்டுக்கொண்டுள்ளதாகவும் செந்தில் தொண்டமான் எமது செய்திப் பிரிவிற்கு தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுப்பதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தன்னிடம் உறுதியளித்ததாகவும் பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் குறிப்பிட்டார்.

சட்ட மாஅதிபர் திணைக்களத்தில் அண்மையில் சீன அரசாங்கத்தின் நிதியுதவின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இலத்திரனியல் நூலகத்தின் கட்டிடத்தின் நினைவு பலகையில், சீன மொழி உள்வாங்கப்பட்டு, இலங்கையின் தேசிய மொழியான தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளமை தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது.

கொழும்பு துறைமுக நகர் பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பெயர் பலகையொன்றிலும் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டு, சீன மொழி உள்வாங்கப்பட்டிருந்தமை தொடர்பில் அண்மையில் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பேசப்பட்டது.

இவ்வாறான நிலையில், தற்போது சட்ட மாஅதிபர் திணைக்களத்திலும் தமிழ் மொழி முழுமையாக புறக்கணிக்கப்பட்டு, சீன மொழி உள்வாங்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »