(ஆர்.யசி)
நாட்டின் தற்போதைய நிலைமைகளை அவதானிக்கும்போது ஜூன் மாதத்தில் மிக மோசமான விதத்தில் கொவிட் -19 வைரஸ் பரவல் தாக்கமொன்று ஏற்படும். சுகாதார தரப்பினரால் தாக்குப்பிடிக்க முடியாத அளவுக்கு கொவிட் -19 வைரஸ் தாக்கங்களுக்கு முகங்கொடுக்க நேரிடலாம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுக்கிறது. நாட்டை இரு வாரகாலமேனும் முடக்குவதே நிலைமைகளை கட்டுப்படுத்த ஒரே வழிமுறை எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
கொவிட் -19 வைரஸ் தாக்கங்கள் மோசமான விளைவுகளை ஏற்படுத்திவரும் நிலையில் இது குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் செனால் பெர்னாண்டோ கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு கூறினார். அவர் மேலும் கூறுகையில்,
தற்போதுள்ள கொவிட் -19 வைஸ் பரவல் நிலைமைகளை அவதானிக்கும்போது ஜூன் மாதம் மிகவும் மோசமானதாக மாறலாம், மிக மோசமான சுகாதார நெருக்கடிகளை உருவாக்கும் என்ற நிலையொன்றே இப்போது தென்படுகிறது.
கொவிட்-19 வைரஸ் பரவல் தொடர்பான நாளாந்த தரவுகளை அவதானிக்கும்போது அடுத்த இரண்டு வாரங்களில் அதிக எண்ணிக்கையான கொவிட் -19 வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுவர்.
இப்போதுள்ள நிலையில் சுகாதார தரப்பினர் மிகவும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர் என்பது எமக்கு தெரியும். ஆனால் உடனடியாக இறுக்கமான கட்டுப்பாடுகளை விதித்து மக்களின் நடமாட்டத்தை முழுமையாக தடுக்க வேண்டும். இல்லையேல் சுகாதார தரப்பினரால் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு மிகவும் மோசமான விதத்தில் நாட்டின் நிலைமைகள் மாறும் என தெரிவித்துள்ளது.
