Our Feeds


Saturday, May 22, 2021

www.shortnews.lk

காடழிப்பு பற்றி பொய் தகவலை பேஸ்புக்கில் வெளியிட்ட அதிகாரி CID யினால் கைது.

 



(எம்.எப்.எம்.பஸீர்)


காணி உரித்துகள் நிர்ணய திணைக்களத்தின் கொத்மலை பிராந்திய உதவி ஆணையாளர் சமில ஜயசிங்க குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


தனது பேஸ்புக்கில் காடழிப்பு தொடர்பில் போலியான தகவல்களை வெளியிட்டமை தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

பசறை பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலராகவும் ரிதியமாலியத்த பிரதேச செயலகத்தின் பதில் பிரதேச செயலராகவும், ஊவா பரணகம பிரதேச செயலகத்தின் பிரதேச செயலராகவும் முன்னர் பதவி வகித்த சமில ஜயசிங்க, தற்போது காணி உரித்துகள் நிர்ணய திணைக்களத்தின் கொத்மலை பிராந்திய பிரதானியாக பதவி வகித்து வருகின்றார்.

இந்நிலையிலேயே 42 வயதான அவரை நேற்று (21) வெள்ளிக்கிழமை நண்பகல் கெலி ஓய பகுதிக்கு சென்ற சி.ஐ.டி. குழுவினர் கைது செய்துள்ளனர்.

அவரைக் கைது செய்யும்போது சிஐடி. அதிகாரிகள், அவரின் மனைவியிடம் கைதுக்கான காரணமாக, சிங்கராஜ வன அழிப்பு தொடர்பில் சில மாதங்களுக்கு முன்னர் பேஸ்புக்கில் பகிர்ந்த பதிவு ஒன்றை மையப்படுத்தி குறித்த கைது நடவடிக்கை இடம்பெறுவதாக கூறியுள்ளனர்.

இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன,

‘ இலங்கையின் பிரசித்தமான காடுகளில் இடம்பெறும் வன அழிப்பு என கூறி குறித்த சந்தேக நபர் சில புகைப்படங்களை பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார். எனினும் விசாரணைகளில் அச்த புகைப்படங்கள் தனி நபர்களின் காணி சுத்தப்படுத்தும் நடவடிக்கைகளின்போது எடுக்கப்ப்டடவை என தெரிய வந்துள்ளது.

அதன்படி தண்டனை சட்டக் கோவையின் 120 ஆவது அத்தியாயத்துக்கு அமைய அவர் தண்டனைக்குரிய குற்றம் ஒன்றை புரிந்துள்ளமை தொடர்பில் விசாரணையில் வெளிப்படுத்தப்பட்டது. அதன் பிரகாரமே அவர் பொது மக்களிடையே அவ நம்பிக்கை, அதிருப்தி ஏற்படும் வகையில் பேஸ்புக்கில் போலியான விடயங்களை பகிர்ந்தமைக்காக கைது செய்யப்பட்டார்.’ என தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »