Our Feeds


Thursday, May 20, 2021

www.shortnews.lk

VIDEO: இஸ்ரேலின் இழிசெயலை இலங்கை ஒரு பார்வையாளராகப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது! - ரவூப் ஹக்கீம்

 



பலஸ்தீனத்தில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் கொடூரமான போர் குற்றங்களை சர்வதேச சமூகம் கவனத்தில் கொண்டு, அவற்றிற்கு காரணமான தலைவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டி நேரிடும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.


பலஸ்தீன மக்களின் மீது இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலுக்கு எதிராகப் நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (19) உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு உரையாற்றுகையில் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் மேலும் கூறியதாவது,
அரசாங்கத்தின் கவனத்துக்கு ஒரு முக்கியமான விடயத்தைக் கொண்டுவர வேண்டியுள்ளது. இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் பயங்கரமான தாக்குதல்கள் கடந்த இரண்டு வாரங்களாக சர்வதேச ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாக இடம்பிடித்துள்ளன.

ஐ.நா. பாதுகாப்பு சபை தாமதித்து கடந்த 16ஆம் திகதி ஞாயிற்றுகிழமை கூறியபோதிலும், இஸ்ரேலை வற்புறுத்தி பின்வாங்கச் செய்வதற்கு பெரிதாக எதையும் சாதித்து விடவில்லை. ஐ.நா. பாதுகாப்புச் சபையினால் ஒரு கூட்டறிக்கையைக் கூட வெளியிட முடியாது போயுள்ளது.

இறந்தவர்களின் எண்ணிக்கை 220ஐயும் தாண்டிவிட்டது. அதில் அரைவாசிக்கும் அதிகமானோர் சிறு பிள்ளைகளும், பெண்களும்,வயோதிபர்களும் ஆவர்.

இஸ்ரேலின் இராணுவ பலத்துடன் ஒப்பிடும்போது ஹமாஸின் பலம் எம்மாத்திரம்? ஒப்பீட்டளவில் பார்த்தால் பலஸ்தீனர்களுக்கு ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளும்,சேதங்களும் மிகவுமே பாரதூரமானவையாகும். பலஸ்தீனத்திற்கு ஏற்பட்ட உட்கட்டமைப்புச் சேதங்களை நிவர்த்தி செய்ய நீண்ட காலம் செல்லும்.

இஸ்ரேல், சட்டபூர்வமான தற்பாதுகாப்புக்காக என்ற போர்வையில் பலஸ்தீனர்கள் மீது தாக்குதல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றது; வியென்னா சாசனத்தையும் மீறி மனித உரிமை, மனிதாபிமான நெறிமுறைகளை அறவே பொருட்படுத்தாமல் மிலேச்சத்தனமாக நடந்து கொள்கிறது.

இஸ்ரேலுக்குச் சார்பான அதன் மேற்கத்தேய நேச நாடுகள் இவ்வாறான ஈவிரக்கமற்றத் தாக்குதல்களுக்கு தூண்டுதலும் உற்சாகமும் அளித்து வருகின்றன.

இலங்கையை பொறுத்தவரை இவ்வாறான இழிசெயலை அமைதியாக வெறுமனே ஒரு பார்வையாளராகப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. சற்று முன்னோக்கிச் சென்று இந்தக் கொடுமையை வன்மையாகக் கண்டிக்கத் தயங்கக் கூடாது. மிகக் குறைந்தபட்சம் நமது நாடு பிரதிநிதித்துவப்படுத்தக் கூடிய சர்வதேச மட்டத்திலான உயர் சபைகளில் இந்த விவகாரம் தொடர்பில் வன்மையாகக் கருத்துரைக்க வேண்டும்

அதைவிடவும், இந்நாட்டின் பெரும்பாலான மக்களின் மனக்கொதிப்பை புரிந்துகொண்டு ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் பலஸ்த்தீனர்கள் மீது இஸ்ரேல் கட்டவிழ்த்துவிட்டுள்ள ஈனத்தனமாக, ஈவிரக்கமற்ற தாக்குதல்களுக்கு எதிராக உலகளாவிய ரீதியில் கிளர்ந்தெழும் எதிர்பலைகளை கவனத்தில் கொண்டு பலத்த கண்டனத்தைத் தெரிவிக்குமாறு வேண்டிக் கொள்கின்றேன்.

எதிர்க்கட்சித் தலைவர் நேற்று இந்தச் சபையில் உரையாற்றியபோது இஸ்ரேலின் மூர்க்கத்தனமான செயலை இன ஒழிப்பு நடவடிக்கை எனக் குறிப்பிட்டார்.

பலஸ்தீனத்தில் இஸ்ரேல் மேற்கொண்டுவரும் இவ்வாறான கொடூரமான போர் குற்றங்களை சர்வதேச சமூகம் புரிந்துகொண்டு அவற்றுக்கு காரணமான தலைவர்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன்னிறுத்த வேண்டி நேரிடும் என்றார்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »