(நா.தனுஜா)
கொவிட் – 19 வைரஸ் பரவலின் மூன்றாவது அலையை எதிர்கொள்வதில் இலங்கை திணறிக் கொண்டிருக்கிறது. தடுப்பூசி வழங்கலின்போது உரிய செயற்றிட்டம் பின்பற்றப்படவில்லை என சர்வதேச மன்னிப்புச் சபை சுட்டிக் காட்டியிருக்கிறது.
மேலும் சர்வதேச சட்டங்களின் பிரகாரம், நாட்டுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டிய கடப்பாடு இலங்கை அரசாங்கத்துக்கு உள்ளது என்றும் மன்னிப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.
‘கொரோனா வைரஸ் பரவலின் மூன்றாவது அலைக்கு முகங்கொடுப்பதில் திணறும் இலங்கை’ என்ற தலைப்பில் சர்வதேச மன்னிப்புச் சபையால் இன்று (10) வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
கொவிட் – 19 வைரஸ் பரவலால் இன்னமும் தெற்காசிய நாடுகள் பாரிய சவாலுக்கு முகங்கொடுத்து வருகின்றன. அந்த சவாலில் இருந்து விலகிச்செல்ல முடியாது என்பதை இலங்கை நிரூபித்திருக்கிறது.
இலங்கையில் தடுப்பூசி வழங்கல் தொடர்பில் பின்பற்றப்படும் செயற்திட்டம், தேவையானளவு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்வதில் காணப்படும் சவால் மற்றும் தடுப்பூசி வழங்கலின்போது தொற்றினால் உயர் அச்சுறுத்தல் காணப்படும் தரப்பினருக்கு முன்னுரிமை வழங்குவதில் காணப்படும் குறைபாடுகள் உள்ளடங்கலாகப் பல்வேறு விடயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தியிருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளது.
