கொரோனாவின் மூன்றாவது அலை, விஸ்வரூபமெடுத்து ஆடியமையால், நாட்டில் பயணக்கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், மழை வெள்ளத்தினால் பலரும் பாதிக்கப்பட்டு நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ளனர்.
இரத்தினபுரி பகுதியில் ஏற்பட்ட மண்சரிவுக்குள் சிக்குண்டு காணாமல் போன மூவரில், 16 வயதான சிறுமி, சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மற்றொருவர் மாயமாகியுள்ளார் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கூறியுள்ளது. கடுபிட்டி ஓயா பெருக்கெடுத்தமையால், முஹுணுவட்டவன பகுதியை சேர்ந்த 21 வயதான மற்றுமோர் இளைஞன் காணாமல் போயுள்ளார்.
நேற்றுக்காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில், இங்கிரியவில் ஆகக் கூடுதலாக 326.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. அதற்கு மேலதிகமாக பஸியால பிரதேசத்தில் 287 மில்லிமீற்றரும் ஹொரணையில்244.5 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சியும் பதிவாகியுள்ளது என வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.
கடந்த சில தினங்களாக பெய்துவரும் அடைமழை, வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு ஆகிய இயற்கை அனர்த்தங்கள் காரணமாக 31,990 குடும்பங்களைச் சேர்ந்த 1,33,280 பேர் நிர்க்கதியாகியுள்ளனர்.
கம்பஹா, இரத்தினபுரி, கொழும்பு, புத்தளம், களுத்துறை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்களே அதிகமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். “இதில் 1,119 குடும்பங்களைச் சேர்ந்த 5,607 பேர் 27 பாதுகாப்பான தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்” என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
மேலும், 200 குடும்பங்களைச் சேர்ந்த 792 பேர் உறவினர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர் என்றார்.
அத்துடன், கம்பஹா மவட்டத்தின் 13 பிரதேச செயலகப் பிரிவுகளில் 23,455 குடும்பங்களைச் சேர்ந்த 98,052 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தில் 6,608 குடும்பங்களைச் சேர்ந்த 28,240 பேரும்
புத்தளம் மாவட்டத்தில் 915 குடும்பங்களைச் சேர்ந்த 3,137 பேரும்
இரத்தினபுரி மாவட்டத்தில் 322 குடும்பங்களைச் சேர்ந்த 1,242 பேரும்
நுவரெலியா மாவட்டத்தில் 67 குடும்பங்களைச் சேர்ந்த 290 பேரும்
களுத்துறை மாவட்டத்தில் 384 குடும்பங்களைச் சேர்ந்த 1,454 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இயற்கை அனர்த்தங்களால் 5 மாவட்டங்கள் பாரிய அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ளன.
களுத்துறை மாவட்டத்தில் இங்கிரிய, பாலிந்தநுவர, புளத்சிங்ஹல, அகலவத்த மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட,கலவான ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் மண்சரிவு ஏற்படலாம் என சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்டங்களில் காட்டாறு வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் தாழ்நில பிரதேசங்கள் வௌ்ளநீரில் நிரம்பியுள்ளன.
இதேவேளை, அத்தனகலு ஓயாவை அண்மித்த அத்தனகல்ல, கம்பஹா, மினுவாங்கொட, ஜாஎல பிரதேசங்களிலும் சிறியளவில் வெள்ளம் ஏற்பட்டிருக்கிறது. மழை தொடர்ந்தும் பெய்யுமிடத்து, வெள்ளத்தின் மட்டம் உயரலாம் என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
