Our Feeds


Sunday, June 6, 2021

www.shortnews.lk

ஒப்பந்தத்தில் கைச்சாத்திட 38 வீரர்கள் மறுப்பு - இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுப் பயணத்தில் பெரும் சிக்கல்.

 



ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்கு இலங்கை வீரர்கள் பலர் மறுத்துள்ளதால் இங்கிலாந்துக்கான கிரிக்கெட் விஜயம் சிக்கலுக்குள்ளாகியுள்ளது.


ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் முன்வைக்கப்பட்ட வெளிநாட்டு கிரிக்கெட் விஜயங்களின் போதான ஒப்பந்தங்களில் 38 வீரர்கள் கைச்சாத்திடுவதற்கு மறுத்துள்ளனர்.

இந்த 38 வீரர்களும் தங்களது மறுப்பை தெரிவித்து அறிக்கை ஒன்றில் கையொப்பமிட்டு ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்துக்கு சமர்ப்பித்துள்ளனர்.

இங்கிலாந்துக்கான கிரிக்கெட் விஜயத்துக்கு தெரிவுசெய்யப்படக் கூடியவர்கள் எனக் கருதப்படுபவர்களும் இந்த ஒப்பந்தங்களில் கைச்சாத்திட மறுத்துவருவதால் அந்த விஜயம் பாதிக்கப்படலாம் என கருதப்படுகின்றது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் இந்த வருடாந்த ஒப்பந்தங்களில் கைச்சாத்திட இவ்வளவு பெருந்தொகை வீரர்கள் மறுப்பு தெரிவித்துள்ளமை இதுவே முதல்தடவையாகும்.

ஒப்பந்தங்களில் வெளிப்படைத் தன்மை இல்லை எனவும் சிரேஷ்ட வீரர்களுக்கு போதுமான சம்பளம் வழங்கப்படுவதாகத் தெரியவில்லை எனவும் வீரர்கள் கருதுகின்றனர்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் 2020 அக்டோபர் மாதத்துக்குப் பின்னர் வீரர்களுக்கான மத்திய ஒப்பந்தங்களை வழங்காதபோதிலும் அவர்கள் தற்காலிக சுற்றுப்பயண ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே போட்டிகளில் பங்குபற்றிவந்தனர்.

ஆனால், இப்போது தங்களது ஒப்பந்த விடயத்தில் வீரர்கள் விடாப்பிடியாக இருப்பதுடன் இங்கிலாந்துக்கான கிரிக்கெட் விஜயத்துக்கு முன்னர் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திடமிருந்து நல்ல பதிலை எதிர்பார்த்துள்ளனர்.

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஒப்பந்தங்களை கொள்கையளவில் வீரர்கள் மறுத்துள்ள அதேவேளை, இந்த ஒப்பந்தங்கள் தொடர்பில் சட்டரீதியான ஆட்சேபனைகளும் எழுப்பப்பட்டுள்ளதாக வீரர்களின் சட்டத்தரணி நிஷான் ப்ரேமாதிரட்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை அணியினர் புதன்கிழமை அதிகாலை இங்கிலாந்து நோக்கி பயணமாவதாக இருக்கின்றது.

ஒப்பந்தங்களில் கைச்சாத்திட மறுத்துள்ள வீரர்கள்

குசல் பெரேரா, திமுத் கருணாரட்ன, ஏஞ்சலோ மெத்யூஸ், தனஞ்சய டி சில்வா, தினேஷ் சந்திமால், குசல் மெண்டிஸ், நிரோஷன் திக்வெல்ல, சுரங்க லக்மால், தசுன் ஷானக்க, வனிந்து ஹசரங்க, லசித் எம்புல்தெனிய, பெத்தும் நிஸ்ஸன்க, லஹிரு திரிமான்ன, துஷ்மன்த சமீர, கசுன் ராஜித்த, லக்ஷான் சந்தகேன், விஷ்வா பெர்னாண்டோ, இசுறு உதான, ஓஷத பெர்னாண்டோ, ரமேஷ் மெண்டிஸ், லஹிரு குமார, தனுஷ்க குணதிலக்க, அஷேன் பண்டார, அக்கில தனஞ்சய, சாமிக்க கருணாரட்ன, அசித்த பெர்னாண்டோ, பினுர பெர்னாண்டோ, ஷிரான் பெர்னாண்டோ, அவிஷ்க பெர்னாண்டோ, இஷான் ஜயரட்ன, சரித் அசலன்க, தனஞ்சய லக்ஷான், நுவன் ப்ரதீப், சதீர சமரவிக்ரம, கமில் மிஷார, ப்ரவின் ஜயவிக்ரம, ரோஷேன் சில்வா, மினோத் பானுக்க ஆகிய 38 வீரர்களே ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் ஒப்பந்தத்தில் கைசாத்திட மறுத்துள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »