Our Feeds


Thursday, June 17, 2021

www.shortnews.lk

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்; 64 பேருக்கும் விளக்கமறியல் நீடிப்பு

 



கனகராசா சரவணன்


உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டிருக்கும் 64 பேரின் விளக்கமறியல், எதிர்வரும் 1ஆம் திகதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது.


 காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட சஹ்ரானின் சகோதரி, சியோன் தேவலாய தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் உட்பட ​வெவ்வேறு 4 வழக்குகளில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருக்கும் 64 பேரின் விளக்கமறியல்களுமே இவ்வாறு நீடிக்கப்பட்டுள்ளன.

 மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவானும் களுவாஞ்சிக்குடி ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றங்களின் மேலதிக நீதவானுமான கருப்பையா ஜீவராணி, இன்று   வியாழக்கிழமை (17) மேற்கண்ட உத்தவைப் பிறப்பித்தார்.

கடந்த 21.04.2019  உயிர்த்த ஞாயிறன்று இடம் பெற்ற தாக்குதலின் பின்னர் சஹ்ரான் குழுவோடு தொடர்புடையவர்கள் என்றும் இவர்கள், ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரொலியா போன்ற இடங்களுக்கு பயிற்சிகளுக்காக சென்றார்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டவர்களாவர்.

மேற்படி குற்றச்சாட்டின் கீழ்,  காத்தான்குடியை சேர்ந்த  63 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 15 பேர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் 58 பேர் தொடர்ந்து விளக்கமறியல் வைக்கப்பட்டுள்ளனர்

இந்த 58 பேருடன் குண்டுதாக்குதல் தொடர்பாக வெவ்வேறு 14 வழக்கு இலக்கங்களை கொண்ட சஹ்ரானின் சகோதரி மற்றும் அவரின் கணவர், சியோன் தேவாலய தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட ஆசாத்தின் தாயார், சீயோன் தேவாலய தற்கொலை குண்டுதாரிக்கு பிரயாணம் செய்ய பஸ்வண்டி ஆசனப் பதிவு செய்த சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட 6 பேர் உட்பட  64 பேரும் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். 

இந்த நிலையில்,  குறித்த  வெவ்வேறு 14 வழக்கு இலக்கங்களை கொண்ட 69 பேரின், வழக்குகள் இன்று வியாழக்கிழமை (17) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில்   விசாரணைக்கு எடுக்கப்பட்டபோது பிணையில் விடுவிக்கப்பட்ட 5 பேரும் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.

ஏனைய 64 பேரும் வெவ்வேறு மாவட்டங்களிலுள்ள சிறைகளில் வைக்கப்பட்டுள்ளதுடன் நாட்டில் ஏற்பட்டுள்ள  கொரோனா வைரஸ் காரணமாக அவர்களுக்கான விளக்கமறியல் நீடிப்பு, எழுத்து மூலமாக பிறப்பிக்கப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »