வீரியம் கொண்ட கொவிட் வைரஸ் இனங்களை அடையாளம் கண்டுக்கொள்ளும் நோக்கில், இன்று (01) முதல் விசேட ஆய்வுகள் நடத்தப்படவுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோய் எதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் பிரதானி கலாநிதி சந்திம ஜீவந்தர தெரிவிக்கின்றார்.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து எழுமாறாக அடையாளம் காணப்பட்ட கொவிட் நோயாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட மாதிரிகளின் ஊடாக இந்த ஆய்வுகள் நடத்தப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதன்படி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து 96 மாதிரிகள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாகவும், இந்த மாதிரிகளின் ஊடாக முன்னெடுக்கப்படும் ஆய்வுகளின் பெறுபேறுகளை எதிர்வரும் ஒரு வார காலத்திற்குள் வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
இந்த அனைத்து மாதிரிகளும் நேற்று பிற்பகல் தயார்ப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறுகின்றார்.
வீரியம் கொண்ட கொவிட் வைரஸ் இனங்களை அடையாளம் காணும் வகையில், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடம் இதற்கு முன்னரும் பல்வேறு ஆய்வுகளை நடத்தியிருந்தது.
இவ்வாறு நடத்தப்பட்ட ஆய்வுகளின் ஊடாக, ஐந்து நாடுகளில் பரவும் கொவிட் வைரஸ் இனங்கள் இதற்கு முன்னர் அடையாளம் காணப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
