(நா.தனுஜா)
இலங்கையில் கொவிட் – 19 தொற்றினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையானது, ஒரு மில்லியன் சனத்தொகைக்கு 1.91 சதவீதமாக உள்ளது.
இந்தியாவில் ஒரு மில்லியன் சனத்தொகையில் ஏற்படும் மரணங்களின் வீதம் 2.11 ஆக காணபப்டுகிறது. எண்ணிக்கையின் அடிப்படையில் பார்க்கும்போது தொற்றாளர்கள் மற்றும் மரணங்களின் எண்ணிக்கை இந்தியாவைவிடக் குறைவாக இருந்தாலும், சனத்தொகையின் அடிப்படையில் நோக்குகையில் கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்கள் இந்தியாவை விடவும் மோசமான நிலையில் உள்ளன என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயற்குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினரான வைத்திய நிபுணர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார்.
கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் அதிகரித்து வருவதாக நாம் தொடர்ச்சியாகக் கூறி வருகிறோம். தொற்றினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், மரணங்களுக்கான காரணம் மற்றும் நோயின் பரவல் ஆகிய விடயங்கள் தொடர்பில் பகுப்பாய்வு செய்யவேண்டிய கடப்பாட்டில் இருக்கின்றோம்.
அந்த வகையில் நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் ஆரம்பமான நாளிலிருந்து இடம்பெற்ற மரணங்கள் தொடர்பில் ஆராய்கையில், தொற்றின் காரணமாக முதல் 500 மரணங்கள் பதிவாவதற்கு 343 நாட்கள் தேவைப்பட்டன.
அதன் பின்னர் 72 நாட்களுக்குள் அடுத்த 500 மரணங்கள் பதிவாகின. எனினும் வெறுமனே 13 நாட்களில் மூன்றாவதுகட்டமாக 500 மரணங்கள் இடம்பெற்றன. ஆகவே தொற்றுப்பரவல் ஆரம்பமான காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், தொற்று ஏற்பட்ட ஒருவர் மரணிக்கக்கூடிய காலஅவகாசம் குறைந்துகொண்டே செல்கின்றது.
2020 மார்ச் மாதத்திலிருந்து 2021 ஏப்ரல் மாதம் வரையான காலப்பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்தவர்களின் வீதம் 46.6 சதவீதமாகும். ஆனால் மேமாதத்தில் மாத்திரம் 53.4 சதவீதமான மரணங்கள் இடம்பெற்றிருக்கின்றன. கடந்த ஒருவருடகாலத்தில் பதிவான மரணங்களை விடவும் கடந்த ஒருமாதத்தில் மாத்திரம் பதிவான மரணங்களின் எண்ணிக்கை உயர்வடைந்திருப்பதன் மூலம் நோய்த்தொற்றின் தீவிரத்தைப் புரிந்து கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.
