(எம்.எப்.எம்.பஸீர்)
குற்றவியல் சட்டக் கோவையின் 127 ஆவது அத்தியாயத்தின் கீழ் இந்த வாக்குமூலத்தை வழங்க, ஆசிரியர்கள் இருவர் சார்பிலும் நேற்று (01) கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் கோரிக்கையை முன்வைத்து அதற்கான அனுமதியைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட, புத்தளம் – கரைத்தீவு அல் சுஹைரியா மத்ரஸாவின் ஆசிரியர்களாக செயற்பட்டதாக கூறப்படும் 26,27 வயதுடைய மொஹம்மட் ஜவ்பர் லுக்மான் ஹகீம், மொஹம்மட் நசுருத்தீன் மொஹம்மட் வசீர் ஆகியோர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளின் பின்னர் நேற்று முன தினம் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டிருந்தனர்.
அதன் பின்னர் அவர்கள் நேற்றுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் நேற்று (01) குறித்த விவகாரம் கோட்டை நீதிவான் பிரியந்த லியனகே முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
இதன்போது ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் குறித்த இரு மெளலவி ஆசிரியர்கள் சார்பிலும் மன்றில் பிரசன்னமானார்.
இந்நிலையில் குறித்த இருவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு விசாரணையாளர்களான குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கோரினர்.
எனினும் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் அதனைக் கடுமையாக எதிர்த்தார். 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடை சட்டத்தின் 7 ஆம் அத்தியாயம் பிரகாரம், சந்தேக நபரை வழக்கு விசாரணை முடியும்வரை விளக்கமறியலில் வைக்க வேண்டும் என கூறப்பட்டாலும், பயங்கரவாத தடை சட்டத்தின் 7 (2) ஆம் பிரிவின் கீழ் இந்த இரு சந்தேக நபர்களையும் நீதிமன்றில் சிஐடியினர் ஆஜர் செய்துள்ளதால், சட்டத்தின் பிரகாரம் அவர்களை விளக்கமறியலில் வைக்க நீதிவான் நியாயமான சந்தேகம் தொடர்பில் திருப்தியடைய வேண்டும் என்ற உயர் நீதிமன்றின் மார்க் பெர்ணான்டோ நீதியரசர் வழங்கிய வழக்குத் தீர்ப்பை வைத்து ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் வாதிட்டார்.
இவ்வாறான நிலையில் தனது சேவை பெறுநர்களான குறித்த இரு மெளலவிமாருக்கும் எதிராக எந்தச் சான்றுகளும் இல்லாத நிலையில் அவர்களை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட முடியாது என அவர் வாதிட்டார்.
இதன்போது குறித்த இருவருக்கும் எதிராக சான்றுகள் உள்ளனவா என நீதிவான் சிஐடியினரிடம் கேள்வி எழுப்பினார். அவர்கள் வாய்மொழி மூலமாக சில விடயங்களை கூறியபோதும் எதனையும் எழுத்துமூலம் முன்வைத்திருக்கவில்லை.
இந்நிலையில், நேற்று முன்தினம் ( 31/5) சந்தேக நபர்களை நீதிமன்றில் ஆஜர் செய்தபோது சிஐடி. முன்வைத்த விசாரணை அறிக்கையை ஜனதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனுக்கு வழங்குமாறு சிஐடியினருக்கு உத்தரவிட்ட நீதிவான், அதனையும் ஆராய்ந்து, விளக்கமறியலுக்கு எதிரான தனது வாதத்தை எழுத்து மூலம் எதிர்வரும் 15 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரனுக்கு அறிவித்தார். அதுவரை குறித்த இரு சந்தேக நபர்களையும் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
இதன்போது, விசேட கோரிக்கையை முன்வைத்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், குறித்த இரு சந்தேக நபர்களும், சிஐடியினர் தம்மை ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக சாட்சியம் வழங்க வற்புறுத்தியதாக கூறி உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக சுட்டிக்காட்டினார்.
அத்துடன் அந்த விடயத்தை மையப்படுத்தி குற்றவியல் நடைமுறை சட்டக் கோவையின் 127 ஆவது அத்தியாயத்துக்கு அமைய இரகசிய வாக்குமூலங்களை வழங்க அவ்விருவரும் எதிர்ப்பார்ப்பதாக ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் குறிப்பிட்டார். அத்துடன் அந்த இரகசிய வாக்குமூலம் பதிவு செய்யப்படும்போது தமிழ் மொழி பெயர்ப்பாளர் ஒருவரையும் பெற்றுத் தருமாறு அவர் கோரினார்.
இந்தக் கோரிக்கையை நீதிவான் பிரியந்த லியனகே ஏற்றுக் கொண்டார். குறித்த இரு சந்தேக நபர்களும் தனிமைப்படுத்தல் ஒழுங்கு விதிகளின் கீழ் சிறைச்சாலை திணைக்களத்தின் பொறுப்பில் உள்ளதால், அவர்களை பிசிஆர். பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கை பெற்று, எதிர்வரும் 15 ஆம் திகதி இரகசிய வாக்குமூலமளிக்க நீதிமன்றில் ஆஜர் செய்யுமாறு நீதிவான் பிரியந்த லியனகே, சிறைச்சாலைகள் அத்தியட்சகருக்கு உத்தரவிட்டார்.அதன்படி குறித்த விவகாரம் மீதான விசாரணைகள் எதிர்வரும் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ளன.
முன்னதாக புத்தளம் – கரைத்தீவு அல் சுஹைரியா மத்ரஸாவின் மாணவர்களுக்கு ஆயுதப் பயிற்சி வழங்கிய குற்றச்சாட்டில் மத்ரஸா பாடசாலை ஆசிரியர்களான குறித்த இருவரும் கடந்த மார்ச் 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.
சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அப்போதைய சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன தெரிவித்திருந்தார். இந்நிலையிலேயே தற்போது இருவரும் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளனர்.
