Our Feeds


Sunday, June 6, 2021

www.shortnews.lk

கொழும்புக்குள் வரும் அனைத்து வாகனங்களையும் ஒரே இடத்தில் நிறுத்தி தகவல் திரட்ட தீர்மானம்!

 



(செ.தேன்மொழி)


அத்தியாவசிய சேவை கருதி கொழும்புக்குள் வருகை தரும் வாகனங்களுக்கு ஸ்ரிக்கர் ஒட்டும் நடவடிக்கையில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்த எதிர்பார்த்துள்ளதுடன் கொழும்புக்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு விபரங்கள் சேகரிக்கப்படவுள்ளன.

இதன்போது சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது , கொழும்புக்குள் அத்தியாவசிய சேவை நிமித்தம் வருகை தரும் வாகனங்களுக்காக முன்னெடுக்கப்பட்டுவரும் ஸ்ரிக்கர் ஒட்டும் முறையில் மாற்றமொன்றை செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும்.

எனினும், இவ்வாறு வருகைதரும் அனைத்து வாகனங்களையும் ஓர் இடத்தில் நிறுத்தி வைத்து அவற்றின் விபரங்களை பதிவு செய்து கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதனால் வாகனங்கள் செல்வதற்கு சிறிது காலதாமதல் ஏற்படவும் வாய்ப்புள்ளது. இதேவேளை , அத்தியாவசிய சேவையாளர்களுக்கு இடையூறு ஏற்படுவதை தவிர்க்கும் வகையிலேயே இந்தச் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. அதற்கமைய இந்த செயற்பாடுகள் போக்குவரத்து கட்டுப்பாடு அமுலில் உள்ளவரை மேற்கொள்ளப்படவுள்ளன.

இந்நிலையில், நேற்று (05) சனிக்கிழமை காலை மூன்று மணிநேரத்துக்குள் கொழும்புக்குள் , 42,473 வாகனங்கள் வந்துள்ளன. அதற்கமைய , கடந்த மூன்று தினங்களுடன் ஒப்பிடுகையில் நேற்று 25 சதவீதம் அளவு குறைவளவான வாகனங்களே வந்துள்ளன.

இதன்போது, நிதி நிறுவனங்களின் ஊழியர்களை அழைத்து வந்த வாகனங்களே அதிகளவில் வந்துள்ளதுடன் 9861 வாகனங்கள் இவ்வாறு வந்துள்ளன. இதன்போது எவ்வித காரணமுமின்றி வந்த 931 வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதேவேளை , தனிமைப்படுத்தல் சட்டவிதிகளுக்கு புறம்பாக செயற்பட்டதாக இன்று காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்துக்குள் 995 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது மாத்தளை பகுதியிலேயே அதிக எண்ணிக்கையானோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அதற்கமைய 138 பேர் மாத்தளை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் கண்டியில் 129 பேரும் நிகவெரட்டிய பகுதியில் 75 பேரும் கைது செய்யப்பட்டவர்களுள் உள்ளடங்குகின்றனர். இந்நிலையில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 23,945 பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »