(நா.தனுஜா)
கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் ஒட்சிசன் தேவைப்படும் நோயாளர்களின் எண்ணிக்கை நான்கரை மடங்கினால் அதிகரித்துள்ளது. இந்நிலை தொடருமானால், எதிர்வரும் காலங்களில் இடம்பெறக் கூடிய மரணங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கக் கூடும் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மத்தியகுழு ஊடகக்குழு உறுப்பினரான வைத்தியநிபுணர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துவெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையும் அதனால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையும் அசாதாரணமான வகையில் அதிகரித்து வருகின்றன. தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நாடளாவிய ரீதியில் அதிதீவிர பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளபோதிலும், மக்களிடமிருந்து அதற்குப் போதியளவான ஒத்துழைப்பு கிடைக்கப்பெறவில்லை.
குறிப்பாக நகரப் பகுதிகளில் வாகனங்களின் நடமாட்டம் 40 – 50 சதவீதம் வரையில் காணப்படுவதுடன் மக்களின் நடமாட்டமும் அதிகரித்துள்ளது. 90 சதவீதம் வரையில் உயர் சமூக இடைவெளியைப் பேணுவதன் ஊடாக கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையையும் அதனால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கையையும் குறைப்பதே பயணக்கட்டுப்பாட்டை விதிப்பதன் பிரதான நோக்கமாகக் காணப்பட்டது.
எனவே அதிதீவிர பயணக்கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள இக்காலப்பகுதியில் அநாவசியமாக வெளியில் செல்வதைத் தவிர்த்துக் கொள்வதுடன் இயலுமானவரையில் தனிமையிலிருந்து இந்தத் தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என்று பொதுமக்களிடம் கேட்டுக்கொள்கிறோம் எனவும் தெரிவித்தார்.
