Our Feeds


Monday, June 14, 2021

www.shortnews.lk

இணையவழி பாடசாலை வகுப்புகள் உரிய ஆயத்தங்களுடன் நடைபெறுகிறதா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. - இம்தியாஸ் பாக்கீர் மாக்கார்

 



கொரோனா தொற்று காரணமாக பாடசாலைகள் மூடப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ளது. இடைக்கிடையே பாடசாலைகள் திறக்கப்பட்டாலும் அந்த நடவடிக்கைகள் முறையாக இடம்பெறவில்லை. இதிலும் மேல்மாகாணத்தின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. இன்றும் பாடசாலைகள் மூடப்பட்டிருக்கின்றன. எப்போது பாடசாலைகள் திறக்கப்படும் என்பது யாருக்கும் தெரியாது. இதனூடாக அதிகாரிகளின் தம்மைப் பாதுகாத்துக்கொள்ளும் நடவடிக்கையே இடம்பெறுகின்றது. மாணவர்களுக்கு உதவி செய்யப்படுகின்றது என்ற போர்வையின் கீழ் பரீட்சைகள் பிற்போடப்படுகின்றன. இதனால் மாணவர்களின் பல்கலைக்கழக் நுழைவு எதிர்பாராத அளவு தாமதமாகின்றன. என பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


பாடசாலைகள் மூடப்பட்டமைக்கு மாற்றுத் திட்டமாக இணைய வகுப்புக்களை நடாத்துமாறு ஆலோசனை வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த நடவடிக்கைகள் உரிய முறையிலும் சரியான ஆயத்தத்தோடும் மேற்கொள்ளப்படுகின்றதா என்பது கேள்விக்குறியாக இருக்கின்றது.


பாடசாலைகள் மூடப்பட்டு ஒருவருடம் கடந்துள்ள நிலையில் இணைய வகுப்புக்கள் குறித்து கல்வி அமைச்சு தகவல்களை திரட்டியுள்ளதா?


நாடளாவிய ரீதியில் உள்ள மாணவர்களுக்கு இணைய வகுப்புக்கள் குறித்து அறிவிக்க முன்பு ஸ்மாரட் போன் உள்ள பெற்றோர்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டார்களா?


நாட்டில் உள்ள பின்தங்கிய பிரதேசங்களில் இணையத்திற்கான (சிக்னல்) உள்ளதா என்பது குறித்து ஆராய்ந்தார்களா?


பொருளாதார ரீதியில் பின்தங்கியுள்ள பிரதேசங்களில் உள்ள குடும்பங்களில் உள்ள மாணவர்களுக்கு இலவச இணைய வசதி டேடா வைபை என்பவற்றை வழங்குவதற்குள்ள சந்தர்ப்பம் குறித்து அதிகாரிகள் ஆராய்ந்து பார்த்துள்ளார்களா?


இணைய வகுப்புக்களை நடாத்தவதற்காக ஆசிரியர்களுக்கு தேவையான கொடுப்பனவுகளோ அல்லது வேறு வசதிகளையோ கல்வி அமைச்சு செய்து கொடுத்திருக்கின்றதா?


மிகவும் இலகுவான முறையான தொலைக்காட்சியூடான கல்வி முறையின் கீழ் வகுப்பறை முறையை உருவாக்கி கிழமையில் ஐந்து நாட்கள் காலை வேளையில் பாடங்களை நடாத்துவது குறித்து கல்வி அமைச்சு ஆராய்ந்துள்ளதா?


இணைய வகுப்புக்கள் காரணமாக மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள உளவியல் ரீதியானபாதிப்புக்கள் குறித்து கல்வி அமைச்சு ஆராய்ந்துள்ளதா?


இணையவகுப்புக்கள் ஊடாக அசௌகரியங்களுக்கு உள்ளாகின்ற மற்றும் அவர்களின் பிரச்சினைகள் குறித்தும் தகவல்களை பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் முன்னெடுத்துள்ள நடவடிக்கை என்ன?


இந்த நிலை இன்னும் நீண்டகாலத்திற்கு தொடரக்கூடியதாக இருப்பதால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இடையில் தடைபடாது முன்னெடுப்பதற்கு அரசாங்கம் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.


தற்போது நடைமுறையில் உள்ள இணைய வகுப்புக்களுக்கு முழு நாட்டையும் உள்ளடக்க முடியாமை முறையான செயற்றிட்டம் இல்லாமை தகவல் திரட்டல் செயற்பாடுகள் இல்லாமை பரிந்துரைகள் உரியமுறையில் செயற்படுத்தப்படாமை போன்ற விடயங்களை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் உரிய முறையில் முன்னெடுக்கப்படாமை குறித்து அரச நிறுவனமான தேசிய கல்வி நிறுவனத்தின் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அரசாங்கத்தினால் முடியுமாக உள்ளது.


அந்தந்த பாடசாலைகளின் அல்லது ஆசிரியர்களின் தனிப்பட்ட முயற்சியின் கீழ் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு இடமளித்துவிட்டு பார்த்துக்கொண்டிருப்பது அடுத்த பரம்பரைக்கே இழைக்கின்ற வரலாற்றுத் தவறாக அமையும். இலங்கையின் அரச பாடசாலைகளின் நிலைமை மிகலும் மோசமாக இருக்கின்ற ஒரு நிலை உருவாகியிருக்கின்றது.


பல்கலைக்கழக மாணவர்களின் நிலையும் மோசமாக உள்ளது. அவர்கள் அனைவரிடமும் மடிக்கணிணி இல்லாமையயால் ஒன்லைன் பரீட்சைகள் மற்றும் இணைய வகுப்பு விரிவுரைகளுக்கு செல்ல முடியாத நிலை உள்ளது. இதேநேரம் இரவு பத்து மணி வரை வகுப்புக்கள் நடைபெறுவதால் அவர்கள் மன உளைச்சலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் அறியமுடிகின்றது.


இந்த மாணவ பரம்பரையின் எதிர்காலம் குறித்து ஆழமாக சிந்திக்க வேண்டும். அவர்களின் எதிர்காலத்தை பிரதிபலிக்கின்ற தீர்மானங்களின் போது அவசரப்படாமல் அந்ததுறையில் உள்ள பாண்டித்தியம் பெற்றவர்களின் ஆலோசனைகளைப் பெற்று தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டும். 


இந்த மாணவர்களுக்காக போதுமான தேவைகளை நிறைவேற்றுவதோடு அதற்காக தமது திறமை அனுபவம் ஆகியவற்றைப் பயன்படுத்தி தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க அதிகாரிகளை தூண்டவேண்டும். இந்த மாணவர்கள் எமது நாட்டின் எதிர்காலம். எமது நாட்டின் எதிர்காலத்தை நிலை நிறுத்தவும் எதிர்காலத்தை உரிமை கோரவும் இருப்பது தற்போதுள்ள மாணவப் பரம்பரையே என்று முன்னாள் பிரதமர் டட்லிசேனாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.


எமது வலயத்தில் உள்ள நாடுகள் பொருளாதார ரீதியில் முன்னேறுவதற்கு காலடி எடுத்துவைத்துள்ள நாடுகள் முதலில் கல்வியின் பக்கம் அவதானத்தை செலுத்தி அதற்காககவே முதலீடு செய்தார்கள். அவர்கள் மாணவர்களின் இருப்பை கருத்திற்கொண்டு தூரநோக்கோடு அந்த தீர்மானத்தை எடுத்தார்களே ஒழிய அரசியல் இலாபங்களை கருத்திற்கொண்டல்ல. 


அவர்கள் எதிர்கால தலைமுறையினர் குறித்து எடுத்த சரியா தீர்மானமும் முதலீட்டாளர்களின் பிரதிபலன் என்பனவற்றை தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கின்றார்கள். சிங்கப்பூர் மலேஷியா போன்ற நாடுகளிடம் நாம் இவற்றைத் தான் கற்றுக்கொள்ள வேண்டும். குறுகிய நோக்கங்களைவிட்டு இந்த மாணவர்களுக்காக நாம் அனைவூரும் சேர்ந்து குரல் கொடுப்பதோடு அதிகாரிகளின் கண்களையும் திறக்கவேண்டும். 


இந்த மாணவர்களின்  எதிர்காலம் தான் நாட்டின் எதிர்காலம். இந்தநிலை இப்படியே தொடர்வதற்கு இடமளித்துவிட்டு மௌனமாக இருப்பது மாணவர்களுக்கு செய்யும் மிகப்பெரியஅநீதியாகும். என பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் அவர்கள் தெரிவித்துள்ளார்.




 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »