அத்தியாவசிய பொருட்களை கொண்டு வரும் வாகனங்களுக்கு அருகில் சிறார்களை அழைத்து செல்ல வேண்டாம் என பொரள்ளை ரிஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் டொக்டர் தீபால் பெரேரா, பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டில் தற்போது காணப்படுகின்ற நிலைமையின் கீழ், சிறுவர்களை வீடுகளுக்கு உள்ளேயே தங்க வைப்பது சிறந்தது எனவும் அவர் கூறுகின்றார்.
மரக்கறி, பழ வகைகள், உணவு பொருட்களை விற்பனை செய்யும் வாகனங்கள் வீட்டிற்கு அருகில் வருகைத் தரும் போது, அந்த வாகனங்களுக்கு அருகில் சிறுவர்கள் செல்வது வழக்கம் என அவர் குறிப்பிடுகின்றார்.
இவ்வாறு வருகைத் தரும் வாகனங்களுக்கு அருகில், சிறுவர்கள் செல்வதற்கு இடமளிக்க வேண்டாம் என கூறிய அவர், குறித்த வாகனங்களுக்கு அருகில் வீட்டிலுள்ள பெரியவர்களை மாத்திரம் செல்லுமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
பொருட்களை கொள்வனவு செய்ததன் பின்னர், உடனடியாக வீட்டிற்குள் அவற்றை கொண்டு செல்ல வேண்டாம் எனவும், வீட்டிற்கு வெளியிலேயே வைத்து, அவற்றை கழுவி வீட்டிற்குள் கொண்டு செல்லுமாறும் அவர் கூறுகின்றார்.
இதேவேளை, 2 வயது முதல் 15 வயது வரையான அனைத்து சிறுவர்களுக்கும் கட்டாயம் முகக் கவசத்தை அணிவிக்குமாறும் பொரள்ளை ரிஜ்வே ஆர்யா சிறுவர் வைத்தியசாலையின் சிறுவர் நோய் தொடர்பான விசேட வைத்தியர் டொக்டர் தீபால் பெரேரா கேட்டுக்கொண்டுள்ளார்.
