இஸ்ரேலில் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹுவை ஆட்சியிலிருந்து அகற்றி, புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கு எதிர்க்கட்சிகளிடையே உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இஸ்ரேலின் புதிய பிரதமராக நப்தலி பென்னட் (Naftali Bennett) பதவியேற்கவுள்ளார்.
73 வயதான பெஞ்சமின் நெத்தன்யாஹு (Benjamin Netanyahu) மிக நீண்டகாலம் இஸ்ரேலிய பிரதமராக பதவி வகித்தவராவார். 1996 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டுவரை அப்பதவியை வகித்த அவர், பின்னர் 2009 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து 12 வருடங்களுக்கு மேலாக அப்பதவியில் நீடிக்கிறார்.
ஆனால், இறுதியாக கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அவரின் லிக்குட் கட்சி அறுதிப் பெரும்பான்மைப் பலத்தைப்பெறவில்லை.
120 ஆசனங்களைக் கொண்ட இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் பிரதமர் நெத்தன்யா ஹுவின் லிக்குட் கட்சி 29 ஆசனங்களையே கொண்டுள்ளது. பல கட்சிகளுடன் இணைந்து 54 உறுப்பினர்களுடன் இடைக்கால அரசாங்கம் ஒன்றை பெஞ்சமின் நெத்தன்யாஹு அமைத்தார்.
இந்நிலையில், முன்னாள் நிதியமைச்சரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான யாய்ர் லபிட் (Yair Lapid) புதிய அரசாங்கம் அமைப்பது தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வந்தார்.
இந்நடவடிக்கைக்கு முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் நெப்தலி பென்னட்டின் யாமினா கட்சி உட்பட பல கட்சிகள் ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன.
இஸ்ரேலின் அரேபிய இஸ்லாமிய கட்சியான ‘ராம்’ என அழைக்கப்படும், மன்சூர் அப்பாஸ் (Mansour Abbas ) தலைமையிலான ஐக்கிய அரபு பட்டியல் எனும் கட்சியும் (United Arab List – Ra’am ) இக்கூட்டணியில் இணைந்துள்ளமை குறிப்பிடத்தககது. இஸ்ரேலிய வரலாற்றில் அந்நாட்டு ஆளும் கூட்டணியில் அங்கம் வகிக்கவுள்ள முதலாவது அரேபிய கட்சி இதுவாகும். நாடாளுமன்றத்தில் இக்கட்சி 4 ஆசனங்களைக் கொண்டுள்ளது,
யாய்ர் லபிட்டின் யேஷ் அதிட் (Yesh Atid) கட்சிக்கு 17 ஆசனங்களும் நெப்தலி பென்னட்டின் யாமினா (Yamina) கட்சிக்கு 7 ஆசனங்களுமே உள்ளன. எனினும் இவ்விரு கட்சிகளின் தலைமையில் புதியஅரசாங்கத்தை அமைப்பதற்கு உடன்பாடுகள் ஏற்பட்டுள்ளன.
புதிய அரசாங்கம் அமைப்பதற்கு நேற்று புதன்கிழமை நள்ளிரவு வரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இக்காலக்கெடு முடிவடைவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர், புதிய அரசாங்கம் அமைப்பதற்கான உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக இஸ்ரேலிய ஜனாதிபதி ரூவன் ரிவ்லினிடம் (Reuven Rivlin ) அறிவித்தார். புதிய அரசாங்கம் அமைப்பதற்கான முயற்சியில் தான் வெற்றியீட்டியுள்ளதாக தொலைக்காட்சியொன்றிலும் அவர் தெரிவித்தார்.
இக்கட்சிகளிடையேயான உடன்பாட்டின்படி, 49 வயதான நெப்தலி பென்னட் புதிய பிரதமராக பதவியேற்பார். தற்போது 57 வயதான யாய்ர் லபிட் 2 வருடங்களின் பின்னர் பிரதமராக பதவியேற்பார்.
எனினும், எதிர்வரும் சில தினங்களில் இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள வாக்கெடுப்பு மூலம் புதிய கூட்டணியின் பலம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

