(எம்.எப்.எம்.பஸீர்)
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் முன்னாள் ஊடக செயலரும் தனியார் தொலைக்காட்சி ஒன்றின் ஊடகவியலாளருமான சமுதித்த சமரவிக்ரம, தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாக தெரிவித்த கருத்து தொடர்பில், இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கம் முன்வைத்த முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
அதன்படி குறித்த முறைப்பாட்டுக்கு அமைய, இன்று (08) இலங்கை இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் பிரதிநிதி ஒருவரின் வாக்குமூலத்தை பொலிஸார் பெற்றுக்கொண்டுள்ளனர்.
குறித்த முறைப்பாடு பொலிஸ் மா அதிபர் ஊடாக, மேல் மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு விசாரணைகளுக்காக கையளிக்கப்பட்டுள்ளது. அதன்படி அவர் அதனை மேல் மாகாணத்தின் வடக்கு பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கும், அவர் கம்பஹா சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சருக்கும் விசாரணைகளுக்காக கையளித்துள்ளார்.
அதன்படியே கம்பஹா பொலிஸ் நிலைய குற்றவியல் பிரிவின் பொறுப்பதிகாரியான பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர், குறித்த முறைப்பாடு தொடர்பில் இலங்கை இளம் ஊடகவியலாளர் சங்கத்தின் பிரதிநிதி ஒருவரின் வாக்கு மூலத்தை பதிவு செய்துகொண்டுள்ளார்.
இதன்போது, ஊடகவியலாளர் சமுதித்த தனக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டமை உண்மை எனில் அது பாரதூரமான விடயம் எனவும், அவரது பாதுகாப்பை உறுதி செய்தல் வேண்டும் எனவும் இளம் ஊடகவியலாளர் சங்கம் கோரியுள்ளது.
ஊடகவியலாளர் மட்டுமன்றி எந்த குடிமகனுக்கும் உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக தகவல் கிடைத்தால் அது தொடர்பில் பொலிசாருக்கு முறையிடுவது தமது பொறுப்பு எனவும், அதனை கொண்டு விசாரணை செய்ய வேண்டியது பொலிஸாரின் கடமை எனவும் இதன்போது இலங்கை ஊடகவியலாளர் சங்கம் பொலிஸாருக்கு சுட்டிக்காட்டியுள்ளது.
