Our Feeds


Saturday, July 3, 2021

www.shortnews.lk

ஆடம்பர பொருட்கள் இறக்குமதிக்கு தடை விதிக்க தயாராகிறது அரசாங்கம்.

 



இலங்கை ரூபாவுக்கு நிகரான டொலர் பெறுமதியை நிலையாகப் பேணுவதற்கான மற்றுமொரு நடவடிக்கையாக, ஆடம்பர பொருட்கள் இறக்குமதியை தடை செய்வதற்கு அல்லது இறக்குமதிக்கு கடுமையான கட்டுப்பாடு விதிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக மத்திய வங்கி தகவல்கள் தெரிவிக்கின்றன.


அதற்கமைய, வீட்டுப்பாவனை மின் உபகரணங்கள், கைபேசிகள், வாசனை திரவியங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள் அல்லாத வகைகளுக்கும் அடங்கும் பொருட்களுக்காக இறக்குமதித் தடை விதிக்கப்படவுள்ளது.

எனினும், இந்த கட்டுப்பாடு விதிக்கப்படும் திகதி மற்றும் அந்த கால எல்லை எவ்வளவு காலம் செல்லுபடியாகும் என்பது தொடர்பான இறுதித் தீர்மானம் இதுவரை எடுக்கப்படவில்லை.

தற்போது, கட்டுப்பாடு விதிக்கக்கூடிய பொருட்கள் தொடர்பான பட்டியலை தயாரிக்கும் பொறுப்பு மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள அதேவேளை, இதுதொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை இடம்பெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் மேலதிக கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.

கடந்த சில நாட்களாக, உள்நாட்டுச் சந்தையில் வெளிநாட்டு நாணயத் திரவத்தன்மையின் ஊகிக்கப்பட்ட பற்றாக்குறையொன்று காணப்படும் நிலையில், இந்த நிலைமை தொடருவதனை தவிர்த்துக்கொள்ளும் முகமாக மேற்படி தீர்மானத்துக்கு வந்துள்ளதாக மத்திய வங்கி பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். 

இதேவேளை, மேலும் இரண்டு வருடங்களுக்காவது வாகன இறக்குமதிக்கு தடை விதிக்க நேரிடும் என கடந்த வாரம் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்தார்.

இதனால் உள்நாட்டில் வாகனங்களை கூட்டிணைக்கும் மற்றும் உற்பத்தி செய்யும் தொழில் முயற்சியாளர்களை பலப்படுத்தும் அவசியத்தையும் அவர் இதன்போது தெரிவித்தார்.

வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்காக, உள்நாட்டில் உற்பத்தி செய்யக்கூடிய உதிரிபாகங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்தவேண்டிய காலம் வந்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »