ஆப்கானிஸ்தானிலிருந்து மக்களை வெளியேற்றும் அமெரிக்காவின் நடவடிக்கைகள் முடிவடைவதற்குள் காபூல் விமான நிலையத்தில் மீண்டும் பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்படக்கூடும் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் எச்சரித்துள்ளர்.
கடந்த வியாழக்கிழமை காபூல் விமான நிலைய வாயிலுக்கு அருகில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் 175 பேர் கொல்லப்பட்டதுடன் மேலும் 150 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி தாக்குதலுக்கு ஐஎஸ்.கே என இயக்கம் உரிமை கோரியது. இத்தாக்குதலுக்குத் திட்டமிட்டவரை ட்ரோன் தாக்குதல் மூலம் தான் கொன்றுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதையடுத்து, 112,000 இற்கும் அதிகமானோர் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
அமெரிக்கப் படைகளும் எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் வெளியேறுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் பூர்த்தியடைவதற்கு முன்னர் காபூல் விமான நிலையத்தில் மேலும் பயங்கரவாத தாக்குதல் நடைபெறுவதற்கான அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
‘அடுத்த 24-36 மணித்தியாலங்களில் தாக்குதல் ஒன்று நடத்தப்படுவதற்கான அச்சுறுத்தல் அதிகமாக உள்ளது என எமது தளபதிகள் எனக்குத் தெரிவித்துள்ளனர் என அவர் கூறியுள்ளார்.
