கொட்டகலை பொது சுகாதார அதிகார பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த காலங்களில் 843 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.
அதில் 46 மரணங்கள் இடம்பெற்றுள்ளன. குறித்த மரணங்கள்களில் அதிகமானவை 60 வயதிற்கு மேற்பட்டவர்களே. இதில் குறிப்பாக எந்தவித தடுப்பூசியும் பெற்றுக்கொள்ளாதவர்களே சுமார் 90 சதவீதம் இறந்துள்ளதாக கொட்டகலை பொது சுகாதார வைத்திய அதிகார பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.சுதர்சன் தெரிவித்தார்.
கொட்டகலை பொது சுகாதார பிரிவில் 30 வயதிற்கு மேற்பட்ட தடுப்பூசிகள் பெற்றுக்கொள்ளாத மற்றும் பெற்றுக்கொண்டவர்களுக்கும் சைனோபார்ம் முதலாம், இரண்டாவது டோஸ் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் இன்று (11) காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் வழங்கப்படுகின்றன.
இதன் போது கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இன்றைய தினம் சுமார் 1,600 பேருக்கு முதலாம் இரண்டாம் தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் இதன் போது தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
இன்று கொட்டகலை பொது சுகாதார பிரிவில் இது வரை சுமார் 51,000 தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.
ஆகவே 30 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் குறித்த தடுப்பூசிகளை வந்து பெற்றுக்கொள்ளுமாறும் எதிர்வரும் காலங்களில் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசிகள் பெற்றுக்கொடுக்கும் போது அந்த வயதுடையவர்களும் கட்டாயம் தடுப்பூசிகளை பெற்று கொண்டு இந்த கொடிய கொரோனாவிலிருந்து தங்களது உயிரை பாதுகாத்து கொள்ளுமாறு அவர் மேலும் கேட்டுக்கொண்டார்.
குறித்த தடுப்பூசிகள் வழங்கும் வேலைத்திட்டத்தில் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் தொடர்பாக துண்டு பிரசுரங்களும் விநியோகிக்கப்பட்டன.
-மலையக நிருபர் சுந்தரலிங்கம்
