ஒரு நாட்டினையும் நாட்டு மக்களையும் பாதுகாப்பது சுகாதார தரப்பினரே ஆகவே அவர்களை முதலில் பாதுகாக்க வேண்டும் ஆகவே அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யாவிட்டால் மக்களையும் நாட்டையும் காப்பாற்ற முடியாது என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் உப தலைவருமான மயில்வாகனம் உதயகுமார் தெரிவித்தார்.
டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு ஒரு தொகை வைத்திய ஒக்சிசன் குழாய் கட்டளை கருவி மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் எம்.உதயகுமார் தலைமையில் இன்று நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
கொரோனா பெருந்தொற்று காரணமாக உலகளாவிய ரீதியில் அனைத்து நாடுகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. பல வல்லரசு நாடுகள் கூட பாதிப்பை எதிர்நோக்கியுள்ளன. அமெரிக்கா, இந்தியா, ரஸ்யா போன்ற வல்லரசுகளும் இப்பெருந்தொற்றினால் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
இலங்கை முதல் அலையினை வெற்றிகரமாக எதிர்கொண்டது. இரண்டாவது அலையில் சிறிய அளவு பாதிப்புக்கள் இடம்பெற்றன. ஆனால் மூன்றாவது அலை கடுமையான பாதிப்புக்களை உருவாக்கியுள்ளது. பல உயிர்களை இழக்கவேண்டி ஏற்பட்டது. சுகாதார தரப்பினர் பல சந்தர்ப்பங்களில் பல எச்சரிக்கைகளை விடுத்தார்கள். இந்நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கு பல நடைமுறைகளையும் பின்பற்றுமாறு கூறினார்கள். குறிப்பாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைப்பிரதிநிதிகள் அறிக்கையொன்றினைக் கூட வெளியிட்டிருந்தனர். இதில் பல பரிந்துரைகள் செய்யப்பட்டிருந்தன.
அதில் நாட்டை முடக்குதல், போக்குவரத்து தடை ஏற்படுத்துதல், சுகாதார தரப்பினரை பாதுகாத்தல் போன்ற விடயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. இன்று சுகாதார தரப்பினர் செய்கின்ற சேவைகளை நாம் வெறும் வார்த்தைகளால் கூற முடியாது. சர்வதேச பரிந்துரைகளை அமுல் படுத்தியிருந்தால் சுகாதார தரப்பினரை காப்பாற்றியிருக்கலாம். காலம் தாமதமாக எடுத்த முடிவுகள் காரணமாகத்தான் நாம் இன்று இந்த நிலைக்கு வந்துள்ளோம்.
மூன்றாவது தடைவையாக வந்த இந்த கொரோனா அலை எம்மை பெரிய அளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. ஆகஸ்ட் மாதம் 4500 இற்கும் மேற்பட்ட உயிரிழப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.நாடு முடக்கப்படுவதற்கு முன் தினமும் 5000 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டார்கள். தற்போது 3000 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வருகிறார்கள். ஆனால், மொத்த தொற்றாளர்களில் மரணங்கள் ஆறு சதவீதமாகும் இது ஏனைய நாடுகளைவிட மிகவும் அதிகமாகும்
இது மிக பாரதூர விடயமாகும். ஆகவே சுகாதார துறையினர் கூறுகின்ற அறிவுரைகளை பின்பற்றி சுகாதார இடைவெளிகளை மதித்து நாமும் நடந்து கொள்ள வேண்டும்.
டிக்கோயா வைத்தியசாலைக்கு வைத்திய உபகரணங்கள் வேண்டும் என என்னிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய நான் ஒரு சில உபகரணங்களை இன்று பெற்றுக்கொடுத்துள்ளேன். எனது சொந்த நிதியிலிருந்தும் இன்னும் சில உபகரணங்களை பெற்றுக்கொடுக்க உள்ளேன். அதே நேரம் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச அவர்களும் ஒரு சில உபகரணங்களை அடுத்த மாதமளவில் டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கும் மஸ்கெலியா வைத்தியசாலைக்கும் பெற்றுக்கொடுக்க உள்ளார். இவை அனைத்து ஊடாக எம் மக்களை பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவே இவ்வாறான பணிகளை செய்து வருகிறோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த வைத்திய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வுக்கு முன்னாள் மத்திய மாகாண உறுப்பினரும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளருமான சோ.ஸ்ரீதரன் மற்றும் உள்ளூளராட்சி மன்ற உறுப்பினர்கள் உட்பட வைத்தியசாலையின் சார்பாக மாவட்ட உதவி வைத்திய அதிகாரி ஜே.அருள்குமரன் வைத்தியசாலையின் நிர்வாக உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்;.




