மன்னார் பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் ஒருவரை நியமிப்பது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதை தவிர்க்குமாறு வட மாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மன்னார் பிரதேச சபைக்கு புதிய தவிசாளர் ஒருவரை நியமிப்பதற்கு தடையுத்தரவு பிறப்பிக்குமாறுகோரி மேன்முறையீட்டு நீதிமன்றில் நேற்று மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை பிரதிநிதித்துவப்படுத்தும், மன்னார் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் ஷாஹுல் ஹமீட் மொஹமட் முஜாஹீர் என்பவரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
நாளை இடம்பெறவுள்ள புதிய தவிசாளருக்கான தெரிவினை இடை நிறுத்தக் கோரியும், தவிசாளர் மற்றும் உறுப்புரிமையிலிருந்து தாம் நீக்கப்பட்டமை சட்டத்திற்கு முரணானது எனவும், அவற்றுக்கு எதிராக தடை உத்தரவு பிறப்பிக்குமாறு குறித்த ரிட் மனுவில் கோரப்பட்டுள்ளது.
முன்னாள் தவிசாளர் முஜாஹிர் சார்பில், சட்டத்தரணிகளான என்.எம்.ஷஹீட், சந்தீப் கம்மதிகே ஆகியோரினால் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, நாளை (29) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
