நாடுபூராகவுமுள்ள சகல பாடசாலைகளையும் திறப்பதற்கான வழிக்காட்டல் அறிக்கையை தயாரித்து, நாளைய தினம் (13) கையளிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சுகாதார அமைச்சுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
விசேட வைத்திய நிபுணர்கள், தொழில்நுட்ப மதிப்பீட்டு நடவடிக்கைகளுடன் தொடர்புடைய பிரிதிநிதிகள் மற்றும் கல்வி அமைச்சு ஆகிய பிரிவைச் செர்ந்தவர்களின் ஒத்துழைப்புடன் பாடசாலைகளை மீள திறப்பதற்கான ஆலோசனை அறிக்கை தயாரிக்கப்பட்டு, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தனவால் ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.
இந்த திட்டத்துக்கமைய, நவம்பர் மாதத்துக்கு முன்னர் பாடசாலைகளை மீள திறப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது.
கல்வி பொதுதராதர சாதாரண தரப் பரீட்சை முடிவுகளை வெளியிடுவது தொடர்பிலும் இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது. நடைமுறை பரிசோதனைகள் எதுவும் இதுவரையில் முன்னெடுக்கப்படாமையினால் பரீட்சை முடிவுகளை வெளியிடுவதில் காலத்தாமதம் ஏற்படுமென பரீட்சைகள் திணைக்களம் தனது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளது. நடைமுறை பரிசோதனைகள் இல்லாமல் பரீட்சை முடிவுகளை விரைவாக வெளியிடுவது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
எதுஎவ்வாறாயினும் நாடுபூராகவுமுள்ள சகல முன் பள்ளிகளையும் விரைவாக ஆரம்பிக்க வேண்டுமென அமைச்சர் டலஸ் அழகப்பெரும இதன்போது சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
