(எம்.மனோசித்ரா)
இவ்வாறான போலியான கருத்துக்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று பொதுமக்களிடம் கேட்டுக் கொள்வதாக பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் தகவல்களை தெரிந்து வைத்திருப்பவர்கள் அவற்றை ஊடகவியலாளர் சந்திப்புகளிலும் பொது இடங்களிலும் கூறிக் கொண்டிருப்பது பிரயோசனமற்றது.
எனவே, தெரிந்து வைத்துள்ள தகவல்களை குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு வழங்குவதன் மூலம் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்வதாகவும் பாதுகாப்பு செயலாளர் தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் சார்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கான பொறுப்பை நிறைவேற்றுவதற்கான சகல செயற்பாடுகளும் சட்ட ரீதியாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.
எனவே ஏதேனும் தகவல்கள் தெரிந்திருப்பின் அது தொடர்பில் ஆங்காங்கு விமர்சித்துக் கொண்டிருக்காமல், ஊடகவியலாளர் சந்திப்புக்களை நடத்திக் கொண்டிருக்காமல் குற்ற புலனாய்வு திணைக்களத்திடம் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கின்றோம். காரணம் குற்ற புலனாய்வு திணைக்களமே இது தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருகிறது.
இவ்வாறு முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்கு உதவுவதன் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிறைவேற்றப்பட வேண்டிய கடமைகளை நிறைவேற்றுமாறு சகலரிடமும் கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.
