அரசாங்க அமைச்சுகளில் நடக்கும் கூட்டங்களில் இலங்கையிலுள்ள சீனத் தூதரக அதிகாரிகளின் தலையீடு அதிகரித்திருப்பதாக அமைச்சர்கள் பலர் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.
இது தொடர்பில் அமைச்சரவையின் கவனத்திற்கும் கொண்டுவர அமைச்சர்கள் பலர் முடிவு செய்துள்ளனர். அண்மையில் நெடுஞ்சாலைகள் அமைச்சின் கூட்டமொன்றுக்கு சென்ற இலங்கையிலுள்ள சீனத் தூதரகத் தின் வாணிபப் பிரிவு அதிகாரி அங்கு அமைச்சரிடமே தர்க்கமிட்டு நடந்து கொண்ட விதம் அரசுக்குள் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த புதன்கிழமை மாலை 6 மணிக்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையில் இடம்பெற்ற உயர் மட்டக் கலந்துரையாடலில் சீனத் தூதரகத்தின் வாணிபப்பிரிவு அதிகாரி கலந்து கொண்டார். இக்கலந்துரையாடலில் நெடுஞ்சாலைகள் அமைச்சர் என்ற வகையில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மற்றும் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்த கலந்துரையாடல் நடந்து கொண்டிருந்தபோது கருத்து வெளியிட்ட தூதரக வாணிபப் பிரிவு அதிகாரி, வீதி அபிவிருத்தி அதிகார சபை, வீதி நிர்மா ணத்திற்கான ஒப்பந்ததாரராக சீனாவை தெரிவுசெய்து.
அந்தத் திட்டத்தை ஆரம்பிக்க தேவையான கடன் வசதிகளை சீனாவின் எக்சிம் வங்கி வழங்கினால், துணை ஒப்பந்ததாரர்களை தெரிவு செய்வதற்கான முழு சுதந்திரமும் சீனாவிடம் இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனால் துணை ஒப்பந்ததாரர்களின் அறிவும் அனுபவமும் சம்பந்தப்பட்ட திட்டங்களை தாமதமின்றி முடிக்க உதவும் என்று வாணிபப் பிரிவு அதிகாரி, இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் மற்றும் பிற அதிகாரிகளுக்கு தெரிவித்தார். இதில் தலையிடவோ அதுபற்றி விவாதமோ இருக்க முடியாது என்றும் வாணிபப் பிரிவு அதிகாரி வலியுறுத்தினார்.
சீனத் தூதரக வாணிபப் பிரிவு அதிகாரி விடுத்த கோரிக்கைக்கு பதிலளித்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சீனாவுக்கு கொடுத்த திட்டங்களில் இதுபோன்ற முடிவை எடுக்க முடியாது என்றார். இந்த திட்டங்கள் அரசாங்கத்தின் நிதியுதவி மற்றும் அரச நிறுவனங்களின் ஊடாக முன்னெடுக்கப்படுவதாகவும், அவை அமைச்சுகளின் கீழ் மேற்கொள்ளப்படுவதால், ஒப்பந்ததாரர்களைத் தெரிவு செய்வதில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கும் ஓரளவு அதிகாரம் இருக்க வேண்டும் என்றும் அமைச்சர் இங்கு கூறினார்.
ஆனால் இதற்கு உடன்படாத சீனத் தூதரக அதிகாரி, இலங்கையில் மட்டுமன்றி உலகின் ஏனைய பகுதிகளிலும் இவ்வாறான செயற்றிட்டங்களை சீனா முன்னெடுத்து வருவதாகவும், இவ்வாறானதொரு விடயம் அந்நாடுகளில் இடம்பெறவில்லை எனக் கூறியதுடன் அமைச்சரின் கருத்தை நேரடியாக நிராகரிப்பதாக கடுந்தொனியில் தெரிவித்துள்ளார்.
சீனத் தூதரக அதிகாரியின் நிலைப்பாட்டினால் ஆத்திரமடைந்த அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, அப்படி அதைச் செய்ய முடியாது என்றும் அமைச்சர்களுக்கும் இலங்கை நிர்வாக அதிகாரிகளுக்கும் அங்கு ஏதாவது அதிகாரம் இருக்க வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.
ஆனாலும் அமைச்சரின் கருத்தை ஏற்காத சீனத் தூதரக அதிகாரி, ‘நாங்கள் இலங்கையில் உள்கட்டமைப்பை மேம்படுத்தி வருகிறோம். அதை நீங்கள் மதிக்க வேண்டும். எவ்வாறாயினும், இது வேண்டுமென்றே தடைசெய்யப்பட்டால், அது எங்கள் ஒப்பந்தக்காரர்களை பாதிக்கலாம், அது சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான நல்லெண்ணத்தையும் பாதிக்கலாம்” என்று மீண்டும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, இந்தக் கூட்டம் முடிவின்றி முடிந்துள்ளபோதும் சீன அதிகாரிகளின் இவ்வாறான தலையீடுகள் வேறு பல அமைச்சுகளிலும் இடம்பெற்றுள்ளதால் சில அமைச்சர்கள் ஒன்றிணைந்து இது விடயம் தொடர்பில் அரச மேலிடத்தில் பேச்சுக்களை நடத்த தயாராகி வருவதாக அறியமுடிந்தது.