Our Feeds


Wednesday, January 12, 2022

ShortNews

கணவன் - மனைவி படமெடுத்து சீனாவிடம் அடிமையாகினர் - சாணக்கியன் காட்டம்

 

“சீன வெளி விவகார அமைச்சரும் மஹிந்த ராஜபக்ஷவும் கைக்குள் கைபோட்டு கணவன் - மனைவி போல புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இவர்கள் இவ்வாறு இருப்பதற்கான காரணம், இவர்கள் அந்த நாட்டின் அடிமைகளாக மாறிவிட்டார்கள்” என, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு, நொச்சிமுனை, ஆலையடி சித்தி விநாயகர், கண்ணகியம்மன் கோவிலுக்கான ஒரு தொகுதி மின்குமிழ், பாராளுமன்ற உறுப்பினரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியுதவியின் மூலம் நேற்று முன்தினம் (10) மாலை வழங்கிவைக்கப்பட்டது.

இதன்போது உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர், “இலங்கை அரசாங்கமானது தனது மோசமான தீர்மானத்தின் ஊடாக சீன நிறுவனம் ஒன்றுக்கு 690 மில்லியன் அமெரிக்க டொலர்களை அண்மையில் செலுத்தியுள்ளது.

விவசாய அமைச்சின் தவறான தீர்மானத்தின் காரணமாக, சீனாவில் கழிவுப் பொருட்களாக ஒதுக்கப்பட்ட இலங்கையில் விவசாயிகள் பயன்படுத்த முடியாத உரங்களை இறக்குமதி செய்தபோது, அதனை இந்த நாட்டில் பயன்படுத்த முடியாது என நீதிமன்றம் கட்டளையிட்டதன் பிறகு இலங்கையில் உள்ள ஒரு வங்கியை சீனா தடை செய்தது.

அதனை தொடர்ந்து 690 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலுத்தப்பட்டது. இலங்கையின் பணத்தில் 130 கோடி ரூபாய்க்கு மேலாக தண்டப்பணமாக கட்டப்பட்டுள்ளது.

இந்த பணம், இந்த நாட்டின் மக்களது பணம். மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத் தோட்டத்தில் தேங்காய் பறித்து விற்றோ, பெசில் ராஜபக்ஷ விவசாயம் செய்து உழைத்த பணமும் இல்லை. இந்த நாட்டின் மக்கள் செலுத்திய வரிப் பணமே இவ்வாறு வழங்கப்பட்டுள்ளது.

மக்களது வரிப் பணத்தையெடுத்து வேறு ஒரு நாட்டில் தேவையற்ற செலவை செய்துவிட்டு, இந்த நாட்டு மக்களை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளியுள்ளனர்.

சீன வெளிவிவகார அமைச்சர், இலங்கைக்கு நேற்றைய தினம் (ஞாயிறு) விஜயம் செய்துள்ளார். அவரும் மஹிந்த ராஜபக்ஷவும் கைக்குள் கைபோட்டு கணவன் - மனைவிபோல புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இவர்கள் இவ்வாறு இருப்பதற்கான காரணம், இவர்கள் அந்த நாட்டின் அடிமைகளாக மாறிவிட்டார்கள்.

மக்களின் நலன்கள் தொடர்பாக சிந்திக்கும் நிலையில்லை. இன்று மக்கள் பஞ்சத்தில் வாழும்போது, தங்களின் எஜமானர்களை திருப்திப்படுத்துவதற்காக சீனாவுக்கு இவ்வாறு பெருந்தொகை பணத்தைக் கொடுத்துள்ளனர். இதனை இந்த அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குபவர்களும் வாக்களித்த மக்களும்  உணர வேண்டும்” என்றார்.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »