Our Feeds


Sunday, January 30, 2022

SHAHNI RAMEES

ஹிஷாலினி மரணம் – ரிஷாட் பதியுதீன் உள்ளிட்ட ஐவருக்கு குற்றப்பத்திரிகை தாக்கல்

 

சிறுமி ஹிஷாலினியின் மரணம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 5 பேருக்கு எதிராக அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பான வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாகக் கொழும்பு தெற்கு சிறுவர் மற்றும் மகளிர் விவகார பிரிவின் தகவல்கள் குறிப்பிடுகின்றன.

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் வீட்டில் பணியாற்றிய நிலையில் தீக்காயங்களுக்கு உள்ளான சிறுமி ஹிஷாலினி கடந்த ஜூலை மாதம் 3ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் கடந்த ஜூலை மாதம் 15ஆம் திகதி உயிரிழந்தார்.

சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி, அவரது தந்தை, சகோதரர் மற்றும் குறித்த சிறுமியை பணிக்கு அமர்த்திய தரகர் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

அதுவரையில் வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மீதும் இந்த விடயத்தில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன், வீட்டில் சிறுமி ஹிஷாலினி தங்கியிருந்த அறையில் சில எழுத்துகள் அடையாளம் காணப்பட்டன.

இதனையடுத்து சிறுமி ஹிஷாலியின் சடலம் இரண்டாவது பிரேதப் பரிசோதனைகளுக்காகக் கடந்த ஜூலை மாதம் 30 ஆம் திகதி மீளத் தோண்டி எடுக்கப்பட்டது.

இரண்டாவது பிரேதப் பரிசோதனை அறிக்கை சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் குறித்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைகளுக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதோடு அன்றைய தினம் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »