Our Feeds


Sunday, January 30, 2022

SHAHNI RAMEES

இஸ்லாம் பாடப்புத்தகங்கள் மீளப்பெறப்படுவதன் நோக்கம் என்ன? அரசிலுள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் தெளிவு படுத்த வேண்டும்

 

கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் அச்சிட்டு விநியோகிக்கப்பட்ட இஸ்லாம் பாடநூல்களை மீளப் பெறப்படுவதன் நோக்கம் என்ன என்பதை நீதி அமைச்சர் அலிசப்ரி உள்ளிட்ட அரசிலுள்ள முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரர் தலைமையிலான ஒரேநாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணியின் பரிந்துரைக்கமைய இஸ்லாம் பாட நூல்கள் மீளப் பெறப்படுவதாக ஊடகங்களில் செய்தி வெளிவந்துள்ளது. 

கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தினால் நியமிக்கப்படும் துறைசார்ந்த வாண்மை மிகுந்தோரினால் தான் பாடநூல்கள் எழுதப்படுகின்றன. இஸ்லாம் பாடநூல்களும் அவ்வாறு தான் எழுதப்படுகின்றன. இவ்வாறு எழுதி வெளியிடப்பட்டு விநியோகிக்கப்பட்ட இஸ்லாம் பாடநூல்கள் சம்பந்தமான தீர்மானம் எடுக்கும் உரிமை ஞானசார தேரருக்கு உண்டா? என்பதைக் கேட்க விரும்புகின்றேன். 

இந்த விடயத்தில் அரசில் முக்கிய பங்கு வகிக்கும் அமைச்சர் அலிசப்ரி கவனம் செலுத்த வேண்டும். இதனை மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டும். 

அரசுக்கு ஆதரவு வழங்கி வரும் தேசிய காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயத்தில் மௌனம் காப்பதன் அர்த்தம் என்ன? இந்த மௌனம் இவர்களது சம்மதத்தோடு தான் இந்த நாடகம் அரங்கேற்றப்படுகின்றதா என்ற சந்தேகத்தை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது.

எனவே, இது குறித்து இவர்களும் தெளிவுபடுத்த வேண்டும். அற்ப சுய இலாபத்துக்காக சமுக உரிமைகளை தாரைவார்க்க வேண்டாமென நான் கேட்டுக் கொள்கிறேன். இந்த அரசிடமிருந்து நன்மைகளைப் பெற்றுக் கொடுப்பதற்காகத்தான் அரசுக்கு ஆதரவு வழங்குவதாக கூறும் இவர்கள் பெற்றுக் கொடுக்கும் நன்மை இதுதானா என்பதைத் தளிவு படுத்த வேண்டும்.
 
முஸ்லிம் மக்களின் உரிமைகளைப் பெற்றுக்கொடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டதாகக் கூறப்படும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களான பாராளுமன்ற உறுப்பினர்கள் அதாவுல்லா, ரவூப் ஹக்கீம், ரிசாத் பதியுதீன் ஆகியோரும் கூட இந்த விடயத்தில் மௌனமாக இருப்பது எனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இது முஸ்லிம் மக்களது உரிமை சார்ந்த பிரச்சினை இல்லை என இக்கட்சிகள் கருதுகின்றனவா என்ற சந்தேகம் எழுகின்றது. 

மீளப்பெறப்படும் இஸ்லாம் பாடநூல்களில் என்ன மாற்றங்கள் செய்யப்படவுள்ளன என்பதையாவது இவர்கள் மக்களுக்குத் தெளிவு படுத்த வேண்டும். 

எந்த மார்க்கத்தினதும் விடயங்களில் தீர்மானம் எடுக்கும் உரிமையை அந்தந்த மார்க்க அறிஞர்கள் தான் செய்ய வேண்டும். மார்க்கத்தோடு தொடர்பில்லாத வேறு யாரும் செய்ய முடியாது. இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »