ஒரு ஆரோக்கியமான வாழ்விற்கு தூய்மையான சுற்றுச்சூழல் அத்தியாவசியமானது. அதனை தொடர்ந்தும் சுத்தமாக பராமரித்து கொள்வது நம் அனைவர் மீதும் தலையாய கடமையாக இருக்கின்றது என்றால் மிகையாகாது. நாம் சூழலை எவ்வளவு நேசிக்கிறோமோ அதற்கான பிரதியீட்டை சூழல் நமக்கு திருப்பி தரும் என்பதில் சந்தேகமில்லை.
அதனடிப்படையில் அக்குறணை பிரதேசத்திலுள்ள அரச நிறுவனம் என்கிற ரீதியில் சுற்றுச்சூழலை தூய்மையாக வைத்திருக்கும் நோக்கில் திண்மக்கழிவு முகாமை, மீள்சுழற்சி பயன்பாடுகள் போன்ற பல்வேறுபட்ட வேலைத்திட்டங்களை பல கட்டங்களாக அக்குறணை பிரதேச சபை மேற்கொண்டு வருகின்றது.
அதன் தொடராக அக்குறணை பிரதேச சபை, அக்குறணை ஜப்பான் கம்யூனிட்டியுடன் இணைந்து அக்குறணை நகரில் அப்புறப்படுத்தப்படும் பிளாஸ்டிக் போத்தல்களை (PET) சேகரிக்கும் தொட்டிகளை நகரின் பல பகுதிகளிலும் நிறுவி வருகின்றது.
இது தொடர்பில் அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் அவர்கள், "பிரதேசத்தில் நிறுவப்பட்டிருக்கும் இந்த தொட்டிகளில் பிளாஸ்டிக் போத்தல்கள் மற்றும் பிளாஸ்டிக் டின்களை மட்டும் இடுவதன் ஊடாக சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டிய பொறுப்பு பொது மக்களுக்கு இருக்கின்றது.
எமது ஆரோக்கியமான வாழ்விற்கு தூய்மையான சூழல் என்பது இன்றியமையாதது. எனவே எம்மை சூழ இருக்கும் எமது சூழலை தூய்மையாக வைத்திருந்து எதிர்கால சந்ததிகளிடம் கையளிக்க வேண்டியது நம் அனைவர் மீதும் இருக்கும் அத்தியாவசிய கடமையாகும்." என்பதாக கருத்து தெரிவித்திருந்தார்.