லிற்றோ, லாஃப் நிறுவனங்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், நாட்டு மக்கள் வீதிக்கு வந்து இந்நிறுவனங்களின் தலைவர்கள், அரசாங்கத்தையும் அடித்து விரட்டும் நிலை ஏற்படுமென ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், லிற்றோ, லாஃப் சமையல் எரிவாயு நிறுவனங்களின் தலைவர்கள் ஊடகங்களில் பல்வேறு கருத்துகளை கூறிவருகிறார்கள். இவர்களே எரிவாயு இறக்குமதி செய்து, அதனை நிரப்பி விநியோகமும் செய்தனர். ஆனால் ஊடகங்களுக்கு வந்து இவர்கள் எதைஎதையோ கூறிகொண்டிருக்கிறார்கள் எனவும் தெரிவித்தார்.
நாட்டிலுள்ள 2 கோடி மக்களும் நெஞ்சில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அரசாங்கம் நாட்டு மக்களை கொன்றொழிக்காது, எரிவாயுவை இறக்குமதி செய்தவர்கள், இதன் கலவையில் மாற்றம் செய்தவர்கள் என அனைவருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
அரசாங்கம் இதை செய்யத் தவறினால் நாட்டு மக்கள் வீதிக்கு வந்து லிற்றோ, லாஃப் நிறுவன தலைவர்களையும், அரசாங்கத்தையும் அடித்து விரட்டும் நிலை வருமெனவும் எச்சரித்தார்.