உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை தடுப்பதற்கு போதுமான நடவடிக்கைகளை முன்னெடுக்காமை மற்றும் அத்தாக்குதலுக்கு முன்னர் கிடைத்த பல தகவல்கள் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்காமை ஊடாக தண்டனை சட்டக் கோவையின் 102 ஆம் அத்தியாயத்துடன் இணைத்து வாசிக்கப்பட வேண்டிய அச்சட்ட கோவையின் 296 மற்றும் 300 ஆம் அத்தியாயங்களின் கீழ் குற்றம் ஒன்று இழைக்கப்பட்டுள்ளதா என விசாரணைகள் இடம்பெறுவதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளது. குளியாபிட்டி நீதிவான் நீதிமன்றில், பீ 1411/22 எனும் இலக்கத்தின் கீழ் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின் பிரகாரம், சிஐடியின் சில பொலிஸ் உத்தியோகத்தர்களின் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதுடன், அதனோடு ஒப்பீடு செய்யப்பட்டு சில விடயங்கள் முன் வைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, கடந்த 2019 பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய , கெக்குணகொல்ல பிரதேச முகவரி ஒன்றைச் சேர்ந்த ஸஹ்ரான் ஹாஷிமின் மனைவியான பாத்திமா ஹாதியாவுக்கு சொந்தமான வீட்டை சோதனை செய்ய அப்போதைய சிஐடியின் உயர் அதிகாரிகள் போதுமான ஆலோசனைகள் மற்றும் உத்தரவுகளை வழங்கவில்லை என நீதிமன்றுக்கு சாட்சியாளர் ஒருவரின் வாக்குமூலத்தை மையப்படுத்தி அறிக்கையிடப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில், இந்த விடயம் குறித்து விசாரணை செய்யும் சிஐடியின் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மெரில் ரஞ்சன் லமாஹேவா தலைமையிலான குழுவினர், தற்போது விளக்கமறியலில் உள்ள ஸஹ்ரானின் மனைவி அப்துல் காதர் பாத்திமா ஹாதியாவிடம் வாக்குமூலம் பெற நீதிமன்ற அனுமதியைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
தற்போது கல்முனை மேல் நீதிமன்றில் உள்ள எச்.சி. 653/21 எனும் வழக்குக்கு அமைய வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாத்திமா ஹாதியாவிடம் எதிர்வரும் பெப்ரவரி 12 ஆம் திகதிக்கும் 25 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில் சிறையில் வைத்து வாக்குமூலத்தைப் பெற்றுக்கொள்ள சிஐடியினர் அனுமதி பெற்றுள்ளனர்.