புத்தளம் – வண்ணாத்துவில்லு, லக்டோஸ் தோட்டத்தில், வெடிபொருட்களை சேகரித்து களஞ்சியப்படுத்தும் மற்றும் உற்பத்தி செய்யும் இடம் ஒன்றை முன்னெடுத்துச் சென்றமை தொடர்பில், தேசிய தெளஹீத் ஜமா அத் எனும் தடை செய்யப்பட்ட அமைப்பின் முக்கியஸ்தரான நெளபர் மெளலவி உள்ளிட்ட 6 பேருக்கு எதிராக சட்ட மா அதிபர் புத்தளம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கின் சாட்சி விசாரணைகளை எதிர்வரும் ஏப்ரல் 4 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரணை செய்யவென புத்தளம் மேல் நீதிமன்றில் அமைக்கப்பட்டுள்ள மூவர் கொண்ட சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிபதிகள் குழாம் முன்னிலையில் நேற்று (10) விசாரணைக்கு வந்தது. இதன்போதே இதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.
அத்துடன் தொடர்ச்சியாக இவ்வழக்கை விசாரணை செய்ய திகதிகளைக் குறித்த சிறப்பு நீதிமன்றம், ஏபரல் 4 ஆம் திகதிக்கு மேலதிகமாக மே 30,31 ஆம் திகதிகளிலும், ஜூன் 1,7,9 ஆம் திகதிகளிலும் விசாரணைகளை முன்னெடுப்பது என நேற்று தீர்மானித்தது. இதற்காக 9, 11 முதல் 15 வரையிலான சாட்சியாளர்களுக்கு சாட்சியம் வழங்க நீதிமன்றில் ஆஜராகுமாறு அறிவித்தலும் முதற்கட்டமாக அனுப்பப்பட்டுள்ளது.
இவ்வழக்கில், ஸஹ்ரான் ஹாஷிம் மற்றும் அச்சு மொஹம்மது அஹமது ஹஸ்தூன் ஆகியோருடன் இணைந்து, வண்ணாத்துவில்லு பகுதியில் வெடிபொருட்களை சேகரிக்கும் மற்றும் தயாரிக்கும் இடமொன்றினை முன்னெடுத்து சென்றதாக பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் 6 பேருக்கும் எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அபூ தஹ்தா எனும் அபூ ஹனீபா மொஹம்மட் முபீஸ், அபூ சாபியா எனும் அமீர் ஹம்சா மொஹம்மட் ஹமாஸ், கபூர் மாமா அல்லது கபூர் நாநா எனும் மொஹம்மட் சரீப் ஆதம் லெப்பை, அபூ உமர் எனப்படும் மொஹம்மட் இப்ராஹீம் சாதிக் அப்துல்லாஹ், அபூ செய்த் எனும் நெளபர் மெளலவி அல்லது மொஹம்மட் இப்ராஹீம் நெளபர், அபூ நஜா எனப்படும் மொஹம்மட் ரமீஸ் மொஹம்மட் சாஜித் அல்லது சாஜித் மெளலவி ஆகிய 6 பேருக்கே மேற்படி குற்றப் பகிர்வுப்பத்திரம் கையளிக்கப்பட்டுள்ளது.