Our Feeds


Wednesday, February 16, 2022

ShortNews

சிலுவை, பொட்டுக்கு இல்லாத தடை ஹிஜாப்புக்கு மட்டும் ஏன்? பரபரப்பாகும் மாணவிகளின் ஹிஜாப் வழக்கு விசாரணை


 

‛‛சிலுவை, டர்பன், பொட்டு இதற்கெல்லாம் இல்லாத தடை ஹிஜாப்புக்கு மட்டும் ஏன்” என கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடக்கும் ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கில் மாணவிகள் தரப்பு சட்டத்தரணி ரவிவர்மகுமார் வாதாடினார்.


கர்நாடகாவில் சமீபத்தில், சில கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரிகளில் சீருடையை கட்டாயமாக்க வேண்டும் என கர்நாடக அரசு உத்தரவிட்டது. ஹிஜாப் தடையை எதிர்த்து உடுப்பி மாவட்ட கல்லூரிகளில் பயிலும் மாணவிகள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனா். இந்த வழங்க தொடர்பான விசாரணைகள் நீதிபதி கிருஷ்ணா தீட்சித் தலைமையில் முன்னெடுக்கப்படுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த வழக்கு மூவர் பெஞ்சுக்கு மாற்றம் செய்யப்பட்டது. கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரித்து ராஜ் அஸ்வதி, நீதிபதிகள் கிருஷ்ணா தீட்சித், ஜெஎம் காஸி அமர்வு விசாரித்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பு இந்த அமர்வு இடைக்கால உத்தரவு பிறப்பித்தது.

மாநிலத்தில் பள்ளி, கல்லூரிகளை திறக்க வேண்டும். வழக்கு நிலுவையில் உள்ளதால் மதம் சார்ந்த ஆடைகளை மாணவ-மாணவிகள் அணிய கூடாது என இடைக்கால தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது, இதற்கிடையே இன்று 4 ஆவது நாளாக மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வில் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மாணவிகள் தரப்பு வக்கீல் ரவிவர்ம குமார் வாதத்தை ஆரம்பித்து வைத்துள்ளாா்.

கர்நாடக கல்வி சட்டத்தின் அடிப்படையில் சீருடையை மாற்ற வேண்டும் என்றால் ஒரு ஆண்டுக்கு முன்பே அதுதொடர்பாக அறிவிப்பை பெற்றோர்களிடம் வழங்க வேண்டும். ஹிஜாப்பை தடை செய்ய வேண்டும் என்றால் ஒரு ஆண்டுக்கு முன்பே அறிவிப்பு கொடுத்திருக்க வேண்டும். இந்த சட்டத்தில் ஹிஜாப் தடைக்கான விதிகள் எதுவும் இல்லை. எதன் அடிப்படையில் ஹிஜாப்புக்கு தடை விதித்து, மாணவிகளை வகுப்புக்கு வெளியே நிறுத்தினார்கள் என்ற கேள்வி எழுகிறது.

மேலும் ஹிஜாப்பை மட்டும் எதற்காக அரசு கையில் எடுத்துள்ளது. அரசு உத்தரவிலும் பிற மதம்சார்ந்த் அடையாளங்களை கருத்தில் கொள்ளாமல் ஹிஜாப்பை மட்டும் குறிப்பிட்டது ஏன். ஏனென்றால் அது அவர்களின் மதம் இல்லை. இதன்மூலம் முஸ்லிம் மாணவிகளை மதம்சார்ந்து வேறுபடுத்துவது உறுதியாக தெரிகிறது.

துப்பட்டா, வளையல்கள், தலைப்பாகை (டர்பன்), சிலுவை, பொட்டு போன்ற நூற்றுக்கணக்கான மதச் சின்னங்களை தினமும் மக்கள் அணியும் போது ஹிஜாப் ஏன் தனித்து காட்டப்படுகிறது. சமூகத்தின் அனைத்துப் பிரிவினரிடமும் மதச் சின்னங்களை என்னால் காட்ட முடியும். அரசாங்கம் ஏன் ஹிஜாபை மட்டும் அணியக் கூடாது என்று பாகுபாட்டைச் செய்கிறது? வளையல்கள் அணிந்துள்ளார்களே? அவை மதச் சின்னங்கள் இல்லையா? ஏன் முஸ்லீம் பெண்களை மட்டுமே நீங்கள் தேர்வு செய்கிறீர்கள்? வகுப்பறையை விட்டு வெளியே அனுப்பப்படுவதற்கு மாணவிகளின் மதம் மட்டுமே காரணமாகும். இது அரசியலமைப்பின் 15 ஆவது பிரிவுக்கு எதிரானது. இவ்வாறு அவர் வாதாடியுள்ளாா்.

பின்னர் வழக்கு விசாரணையை நாளை மதியம் 2:30 மணிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்துள்ளதாகவும் நாளை 5 ஆவது நாளாக விசாரணை நடைபெறும் என நீதிமன்றம் அறிவித்ததாகவும் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »