கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்வதற்குப் பதில் எதிர்காலத்தில் பட்டங்களை இழக்கத் தயார் என நட்சத்திர டென்னிஸ் வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் தெரிவித்துள்ளார்.
நோவக் ஜோகோவிச்சால் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளாததால், கடந்த மாதம் நடைபெற்ற அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் அவரால் பங்கேற்க முடியவில்லை. தொடரில் விளையாடுவதற்காக ஆஸி. நுழைந்த அவர் அங்கிருந்தும் வெளியேற்றப்பட்டார்.
தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் ஒன்றின் கேள்விக்குப் பதிலளிக்கையில், கொரோனா தடுப்பூசி விடயத்தில் எடுத்துள்ள நிலைப்பாடு காரணமாக எதிர்காலத்தில் விம்பிள்டன் மற்றும் பிரெஞ்ச் ஓபன் போன்ற தொடர்களில் பங்கேற்பதைத் தியாகம் செய்யத் தயாரா என அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.
இதற்குப் பதிலளித்த ஜோகோவிச், ”ஆம், அதற்கான விலையைக் கொடுக்கத் தயார்” என்று பதிலளித்தார்.
அவர் மேலும் பேசுகையில், ”நான் தடுப்பூசி செலுத்திக்கொள்வதற்கு எதிரானவன் அல்ல. குழந்தையாக இருந்தபோது நானும் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டுள்ளேன். ஆனால், நம் உடலில் என்ன செலுத்திக்கொள்கிறோம் என்பதைத் தெரிவுசெய்வதற்கான சுதந்திரத்தை எப்போதும் ஆதரிப்பவன். பட்டங்கள், மற்ற விடயங்களைக் காட்டிலும் என் உடல் குறித்த முடிவுகள் மிக முக்கியமானது” என்றார்.