விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவருக்கு எதிரான பணச்சலவை வழக்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தால், நேற்று (01) ஒத்திவைக்கப்பட்டது.
மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க முன்னிலையில் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, வழக்கை எதிர்வரும் மார்ச் மாதம் 10ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக அறிவித்தார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 241வது பிரிவின்படி, இந்த வழக்கில் இரண்டாவது மற்றும் ஆறாவது குற்றவாளிகள் ஆஜராகாத நிலையில், வழக்கு விசாரணையைத் தொடர மேல்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
2013 மற்றும் 2014 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில், நாமல் ராஜபக்ஷவிற்கு சொந்தமான கோவர்ஸ் கோர்ப்பரேட் சேர்விசஸ் (பிரைவேட்) லிமிடெட் மூலம் ரூ.30 மில்லியன் பணத்தை மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஆறு பேருக்கு எதிராக சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.
நாமல் ராஜபக்ஷ, இந்திக கருணாஜீவ, சுஜானி போகொல்லாகம, இரேஷா சில்வா, நித்ய சேனானி சமரநாயக்க மற்றும் கோவர்ஸ் கார்ப்பரேட் சர்வீசஸ் (பிரைவேட்) லிமிடெட் ஆகிய நிறுவனங்களுக்கு எதிராக பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் 11 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபர் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தார்.