Our Feeds


Thursday, February 17, 2022

ShortNews

தமிழீழத் தமிழர்களுக்கு இலங்கையின் நாடாளுமன்றம் ஒருபோதும் தீர்வு தராது!

 

இலங்கை நாடாளுமன்றம் தமிழீழத் தமிழர்களுக்கு எந்தக் காலத்திலும் ஒரு தீர்வைத் தராது. ஆட்சியில் உள்ளவர்களுக்கு நெருக்குதல்களை உருவாக்கியே நாம் தீர்வைப் பெற வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

ஆறு கட்சிகள் இணைந்து நேற்றுமுன்தினம் நடத்திய ஈழத் தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வும் தேசிய, பிராந்திய, சர்வதேச நிலவரங்களும் கருத்தரங்கும் கல்வியங்காடு இளங்கலைஞர் மன்றத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசும்போதே விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்தார்.

அவரது உரையின் முழு விபரம் வருமாறு,

ஆறு கட்சிகள் சேர்ந்து நடத்தும் இந்தக் கருத்தரங்கத்தில் பங்குபற்றுவதில் மனமகிழ்வடைகின்றேன். சென்ற வாரம் இந்தியப் பத்திரிகையின் இலத்திரனியல் ஊடகத்துக்கு ஒரு பேட்டி அளித்தேன். அங்கு நான் கூறிய ஒருவிடயம் பத்திரிகைகளில் வெளிவரவில்லை. அதனை இப்பொழுது உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகின்றேன்.

இதுகாறும் பிரிந்து நின்ற ஆறு கட்சிகளும் எவ்வாறு ஒருமித்து அந்தக் கடிதத்தை பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுத முடிந்தது என்று செவ்வி கண்டவர் கேட்டார். அதற்கு நான், எமது அரசியல் குறிக்கோள்களைப் பொறுத்தவரையில் எமக்குள் அதிக வித்தியாசம் இல்லை என்றேன். அவற்றை அடையும் மார்க்கம் பற்றியே எமக்குள் முரண்பாடுகள் உண்டு என்றேன். அதை விளக்குமாறு கோரப்பட்டபோது, நான், எமது தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்துமே ஒற்றையாட்சி வேண்டாம் சமஷ்டி ஆட்சி முறையே வேண்டும் என்று தான் கோரி வருகின்றோம் என்றேன். எமது தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஒரு படி மேலே போய் கூட்டு சமஷ்டியை எமது குறிக்கோளாகக் குறிப்பிட்டுள்ளோம் என்றேன். ஆகவே எமது குறிக்கோள் ஒன்றே அதனை அடையும் விதத்தில் எமக்குள் வேற்றுமைகள், வித்தியாசங்கள், முரண்பாடுகள் உண்டு என்றேன். நான் அங்கு கூறியதை இங்குள்ள அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று நம்புகின்றேன். ஏதோ காரணத்துக்காக செவ்வி கண்டவர் இக்கேள்வியையும் பதிலையும் தணிக்கை செய்துவிட்டார்.

ஆகவே, முக்கியமான ஒரே குறிக்கோளை வைத்திருக்கும் எமது ஆறு கட்சிகளும் இன்று இந்த கருத்தரங்கத்தை ஒருமித்து நடத்துவதில் வியப்பொன்றுமில்லை.

முழு நாட்டினதும் தமிழ் மக்களைப் பற்றிப் பார்க்கும் போது நாம் சுதந்திரம் கிடைத்த காலத்துக்கு முன்பிருந்தே ஆராய வேண்டியுள்ளது. ஏனென்றால், இலங்கைக்கான நாடாளுமன்றம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றிய சதிகள் சுதந்திரத்துக்கு முன்னரே தொடங்கிவிட்டன. அச்சதிகளே இன்று இந்த ஒற்றையாட்சிக்கு உட்பட்ட நாடாளுமன்றத்தை எமக்குத் தந்துள்ளன.

சிங்கள மக்களைப்போல மகாவம்சக் கதைகளையே அவர்கள் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இலங்கையின் தமிழ்ப்பேசும் மக்களில் இலங்கைத் தமிழர்கள் 3000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இலங்கையில் வாழ்ந்து வருகின்றார்கள்.

இங்குள்ள ஆதிவாசிகளான தமிழ்ப்பேசும் மக்களுடன் அந்தந்த காலகட்டத்தின்போது மேலதிகத் தமிழர்கள் இங்கு வந்து சேர்ந்துள்ளார்கள் என்பது தான் வரலாறு.

நாடாளுமன்றத்தின் வகிபாகம் பற்றிப் பார்க்கும் போது, 1972ஆம் ஆண்டின் குடியரசு அரசியல் யாப்பு நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் வரையில் நாடாளுமன்றமே தமிழ் மக்களின் அரசியல் தீர்வு விடயத்தில் முக்கிய பங்கு வகித்தது. இதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. 1948ஆம் ஆண்டின் அரசியல் யாப்பு தனது உறுப்புரை 29(2)இன் மூலமாக சிறுபான்மையினரின் உரித்துகளை ஓரளவு பாதுகாக்க எத்தனித்தது.

ஆகவே, சிங்கள பெரும்பான்மையினரின் ஆதிக்க நடவடிக்கைகளை நாடாளுமன்றத்தில் சுட்டிக் காட்டி பெரும்பான்மையினரை ஓரளவு பின்வாங்கச் செய்யக் கூடியதாக இருந்தது. அப்படியிருந்தும் சிங்களம் மட்டும் சட்டம் உறுப்புரை 29(2)இன் ஏற்பாடுகளுக்கு முரணாக நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டது. இது சிறுபான்மையினருக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்தாலும் தொடர்ந்து நாடாளுமன்றமே தமிழ் மக்களின் உரித்துகளுக்கான போராட்டத்தளமாக தொடர்ந்து இருந்து வந்தது.

அடுத்த காரணம், 1972 வரையில் கூட நாடாளுமன்றத்தில் ஆங்கில மொழியே கோலோச்சி வந்தது. அதன் காரணத்தினால் சகல இன மக்களும் பெரும்பாலும் ஆங்கில மொழியிலேயே பேசியதால் உடனுக்குடன் இரு தரப்பாரின் கருத்துகளும் மற்றையவர்களால் புரிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. கருத்துப் பரிமாற்றங்கள் மூன்றாம் நபரான மொழி பெயர்ப்பாளர் உதவியின்றி நேரடியாக நடைபெற்றன.

1972ஆம் ஆண்டின் முதல் குடியரசு அரசியல் யாப்பு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. வெளிநடப்பு செய்தனர்.

அப்போதிருந்து நாடாளுமன்ற தமிழ் உறுப்பினர்களுக்கு நாடாளுமன்றம் ஒரு அரசியல் பேசும் தக்க புகலிடமாகத் தென்படவில்லை. சிங்கள ஆதிக்கம் பெருகியது. அதே நேரம் காணி உச்ச வரம்புச் சட்டம், வீடுகள் உச்ச வரம்புச் சட்டம் ஆகியன 1972ஆம் ஆண்டின் பின்னர் வெளிவந்து சமூகத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஆகவே, 1972இன் பின்னர் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாடாளுமன்றமானது வெறும் அரசியல் பேசும் அரங்கமாகவே அமைந்தது. ஆனால், அவர்களது பேச்சுகள் சிங்கள மக்களைப் போய் அடையவில்லை. இதற்குக் காரணம் எமது நாடாளுமன்றமானது பெரும்பான்மையினரது அடாவடித்தனத்துக்குத் துணை போக சம்மதித்தமையே. ஜனநாயக முறைமைகள் பேணப்படவில்லை.

சிறுபான்மையினரின் கருத்துகள் பொருட்படுத்தப்படவில்லை. அத்துடன் சிங்கள ஊடகங்கள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பேச்சுக்களைத் தமது ஊடகங்களில் வெளியிடப் பின்நின்றனர்.

அவர்களின் ஆங்கிலப் பேச்சுகள்கூட, கொழும்பு ஊடகங்களில் வெளிவருவது மிக அரிதாகவே இருந்தன. இதனால் தமிழ்ப்பேசும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துகள் சிங்கள மக்களைச் சென்றடையவில்லை. எவ்வளவு தான் உண்மைகளைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் எடுத்துரைத்தாலும் அவை சிங்கள மக்களைச் சென்றடையவில்லை என்பதே உண்மை.

ஆனால், 1972இன் முன்னர் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெரும்பாலும் ஆங்கிலத்தில் பேசியவை பொதுமக்களை சென்றடைந்தன. இன்றோ ஆங்கிலத்தில் பேசினாலும் சிங்கள மக்களைச் சென்றடைவதில்லை. தமிழில் பேசினாலும் எமது கருத்துகள் சிங்களப் பெரும்பான்மை மக்களை அடைவதில்லை.

இந்த காலகட்டத்தில் தான் தமிழ் இளைஞர்கள் அடுத்து என்ன செய்யலாம் என்று சிந்திக்கத் தொடங்கினர். நாடாளுமன்றத்தில் எத்தகைய அறிவுக் கூர்மைசார் பேச்சுகளை நிகழ்த்தினாலும் அவற்றால் பயன் ஏதும் புலப்படவில்லை என்று கண்டு வன்முறையை விடுதலை ஆயுதமாக்கினர்.

2009இல் இளைஞர்களின் ஆயுதங்கள் மெளனிக்கப்படும் வரை தமிழீழ தமிழ் மக்களின் தீர்வு தொடர்பாக நாடாளுமன்றத்தின் வகிபாகம் மிகக் குறைந்தே காணப்பட்டது. எனினும், தமிழ்ப் பிரதிநிதிகள் 22 பேர் அப்போது இருந்துங்கூட அவர்களால் நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் தீர்வு தொடர்பாக எதுவும் செய்ய முடியவில்லை. காரணம் போர் நடந்துகொண்டிருந்தமையே.

2009ஆம் ஆண்டின் பின்னரான நாடாளுமன்றத்தை எடுத்துப் பார்த்தோமானால், நாடாளுமன்ற தமிழ் சிங்கள உறுப்பினர்களுக்கிடையேயான இடைவெளி நீண்டு கொண்டு செல்வதை அவதானிக்கலாம். மலையகத் தமிழர்கள் சிலர் சிங்களத்தில் பேசுவதை சிங்கள உறுப்பினர்கள் புரிந்து கொள்கின்றார்கள். ஆனால் தமிழில் பேசுவோரின் பேச்சின் மொழிப் பெயர்ப்பைக்கூட கேட்கும் பொறுமை சிங்கள உறுப்பினர்களுக்கு இல்லை என்றே சொல்லலாம்.

அடுத்து தமிழ்ப் பேசும் உறுப்பினர்களின் தொகை குறைந்து வருகின்றது. அரசாங்கம் தமிழ்ப் பேசும் உறுப்பினர்களின் கருத்துகளைப் பொருட்படுத்துவதில்லை. ஆங்கிலம் கூட பல சிங்கள உறுப்பினர்களுக்கு புரிவதில்லை. ஆகவே தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்தைப் பொறுத்த வரையில் நாடாளுமன்றத்தின் வகிபாகம் குறைந்து கொண்டே செல்கின்றது.

நாடாளுமன்றத்தின் வகிபாகத்தை ஆராயும் போது ஒன்றை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நாம் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பது ஒற்றையாட்சியின் கீழ்; நாம் கோருவது சமஷ்டி அல்லது இணைப்பாட்சியையே.

ஒற்றையாட்சி முறையைக் கைப்பற்றிக் கொண்டவர்கள் ஒருபோதும் அதன் இறுக்கத்தைத் தளரவிட முன்வரமாட்டார்கள். சமஷ்டி என்பது அந்த இறுக்கப் பிடியைத் தளரச் செய்வது. நாடாளுமன்றத்தில் பங்கு சிங்களப் பிரதிநிதித்துவம் இருக்கும் போது சிங்கள மக்களின் அளுங்குப் பிடிக்குப் பாதிப்பு ஏற்படும் வண்ணம் எதனையும் செய்ய சிங்களப் பிரதிநிதிகள் எவரும் முன்வரமாட்டார்கள். இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

சர்வதேச ரீதியாக நாங்கள் எமது அரசியல் நடவடிக்கைகளை எடுப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் பதவி ஒரு சார்பான ஏதுவாக அமைகின்றது. அன்றாடப் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு வந்து அவற்றைத் தீர்க்க முடியும். ஆனால், தமிழீழத் தமிழர்களின் அரசியல் தீர்வில் நாடாளுமன்றத்தின் வகிபாகம் தற்போது மிகவும் வேதனைக்குரிய அவல நிலையையே அடைந்துள்ளது.

நாங்கள் எங்கள் மக்களுக்கு உணர்வூட்டுவதிலும் பார்க்க அவர்களுக்கு அறிவூட்ட வேண்டும். எமது அரசியல் போராட்டங்களுக்கு மக்களின் நேரடி நடவடிக்கைகளே வலுச் சேர்க்கக்கூடும். இனிவருங்காலத்தில் நாடாளுமன்றத்தில் பேசுவதால் விளையும் நன்மை மிகக் குறைவே. ஆனால் மக்களுக்குப் பிழையான அரசியல் அறிவைப் புகட்டக்கூடாது. ஆகவே, ஆட்சியில் உள்ளவர்களுக்கு நெருக்குதல்களை நாம் உருவாக்காவிட்டால் நாடாளுமன்றம் தமிழீழத் தமிழர்களுக்கு எந்தக் காலத்திலும் ஒரு தீர்வைத் தராது.


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »