Our Feeds


Wednesday, February 16, 2022

ShortNews

சென்னை சூப்பர் கிங்சுக்கு தெரிவான இலங்கை வீரர் மஹீசுக்கு தமிழ்நாட்டில் எதிர்ப்பு - CSK வை புறக்கணிப்போம் ஹேஷ்டேக் பிரபலம்



ஐ.பி.எல் ஏலத்தில் இலங்கை வீரர் மஹீஸ் தீக்‌ஷனவைத் தெரிவு செய்த காரணத்துக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் புறக்கணிப்போம் என ரசிகர்கள் பலரும் டுவிட்டரில் கருத்துகளைப் பதிவு செய்துள்ளார்கள்.


2013இல், இலங்கை அரசுக்கு எதிராகத் தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடைபெற்றன. ஐ.பி.எல் போட்டியில் இலங்கை வீரர்கள் பங்கேற்றால் போட்டியை நடத்த விடமாட்டோம் எனச் சில அமைப்புகள் எச்சரிக்கை விடுத்தன. இதையடுத்து, சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளில் இலங்கை வீரர்கள் கொண்ட அணியை விளையாட அனுமதிக்க மாட்டோம், சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளில், இலங்கை வீரர்கள், நடுவர்கள், அலுவலர்கள் கொண்ட ஐ.பி.எல் அணிகளை அனுமதிக்க வேண்டாம் என .ஐபி.எல் அணி அமைப்பாளர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று அப்போது தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, பிரதமராக இருந்த மன்மோகன் சிங்குக்குக் கடிதம் எழுதியிருந்தாா்.

அப்போது சி.எஸ்.கே அணியில் குலசேகர, அகில தனஞ்ஜெய என இரு இலங்கை வீரர்கள் இருந்தார்கள். இதையடுத்து ஐ.பி.எல் நிர்வாகக் குழு ஒரு முடிவை எடுத்தது. உள்ளூர் மக்களின் உணவுர்பூர்வமான விடயத்துக்கு மதிப்பளித்து, சென்னையில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டிகளில் எந்த அணி சார்பிலும் இலங்கை அணி வீரர்கள் விளையாட மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டது.

2013இல் 11 இலங்கை வீரர்கள் ஐ.பி.எல் போட்டியில் இடம்பெற்றார்கள். ஆனால் அந்த வருடம் சி.எஸ்.கேவின் ஓர் ஆட்டத்திலும் குலசேகரவும் தனஞ்ஜெயவும் விளையாடவில்லை. அடுத்த வருடம் இருவரும் சி.எஸ்.கே அணியில் இடம்பெறவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஐ.பி.எல் ஏலத்தில் இலங்கைச் சுழற்பந்து வீச்சாளர் மஹீஸ் தீக்‌ஷனவை 70 இலட்சம் ரூபாவுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தெரிவு செய்துள்ளது. இதையடுத்து சி.எஸ்.கே அணிக்குக் கண்டனம் தெரிவித்து #BoycottCSK என்கிற ஹேஷ்டேக்குடன் பலரும் ட்விட்டரில் பதிவுகள் எழுதியுள்ளார்கள்.

2013-ல் இலங்கை வீரர்களுக்கு தமிழ்நாட்டில் விதிக்கப்பட்ட தடை முடிந்துவிட்டதா, தமிழ் மக்களின் உணர்வுகளை மதிக்காமல் இலங்கை வீரரை சி.எஸ்.கே அணி தேர்வு செய்துள்ளதால் அதனைப் புறக்கணிப்போம் எனப் பலரும் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்கள். இதனால் #BoycottCSK என்கிற ஹேஷ்டேக் ட்விட்டரில் பிரபலமாகி வருகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »