Our Feeds


Thursday, March 31, 2022

ShortTalk

4 ஆண்டுகளாக மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஆசிரியை கொழும்பு நீதிமன்றில் சரண்!



(எம்.எப்.எம் பஸீர்)


நான்கு வருடங்களாக பாடசாலை மாணவன் ஒருவனை பாலியல் நடவடிக்கைககளுக்கு பயன்படுத்தி துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியைக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், அவர் நேற்று நீதிமன்றில் சரணடைந்தார்.


தனது சட்டத்தரணிகள் ஊடாக சரணடைந்த 34 வயதான குறித்த ஆசிரியையை பிணையில் செல்ல கொழும்பு நீதிவான் நீதிமன்றம் நேற்று ( 30) அனுமதியளித்தது. 10 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் செல்ல, கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனீ அபேவிக்ரம, வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டு உத்தரவிட்டார்.

அத்துடன் இந்த துஷ்பிரயோக சம்பவம் தொடர்பில், பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் ஆஜராகி வாக்கு மூலம் வழங்குமாறு குறித்த ஆசிரியைக்கு நீதிவான் உத்தரவிட்டார்.

இதனைவிட, சம்பவம் தொடர்பில் பூரண விசாரணைகளை முன்னெடுக்க சிறுவர் மற்றும் மகளிர் விசாரணைப் பணியகத்துக்கு உத்தர்விட்ட நீதிவான் லோச்சனீ அபேவிக்ரம, அந்த விசாரணைகளின் பூரண அறிக்கையை சட்ட மா அதிபருக்கு அனுப்பி, அடுத்த கட்ட சட்ட நடவடிக்கை தொடர்பில் ஆலோசனைப் பெற்றுக்கொள்ளுமாறு குறிப்பிட்டார்.

சட்ட மா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக்கொண்ட பின்னர், இவ்வழக்கு தொடர்பில் தற்போது சந்தேக நபராக பெயரிடப்பட்டுள்ள ஆசிரியைக்கு நீதிமன்றம் அறிவித்தல் அனுப்பினால் மட்டும் நீதிமன்றில் ஆஜராவது போதுமானது என நீதிவான் அறிவித்தார்.

இந்த விவகாரத்தில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் கடந்த 10 ஆம் திகதி பொலிஸாருக்கு உத்தரவிட்டிருந்தது.

20வயதுடைய இளைஞர் ஒருவர் மாணவராக இருந்தபோது சந்தேக நபரான ஆசிரியையை கிரிக்கெட் சமர் (பிட்மெச்)ஒன்றின்போது அவரை சந்தித்துள்ளார். அதன்பின்னர் அவரை 60 தடவைகள் கல்கிஸை பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு இந்த ஆசிரியை அழைத்துச்சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளமை தொடர்பிலும் பாடசாலைக்குள்ளே நடந்த துஷ்பிரயோகங்கள் தொடர்பிலும் தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோக தடுப்பு பிரிவு அதிகாரிகள் நீதிமன்றின் கவனத்துக்கு கொண்டு வந்தனர்.

இந்நிலையில் அதுகுறித்து விசாரணைகளை முன்னெடுத்து நீதிமன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், குறித்த ஆசிரியை முன்பிணை கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார். முன் பிணை தொடர்பில் நேற்று முன் தினம் ( 29) கொழும்பு மேலதிக நீதிவான் லோச்சனீ அபேவிக்ரம முன்னிலையில் வாதங்கள் முன்வைக்கப்ப்ட்ட நிலையில், ஆசிரியையை சந்தேக நபராக கருதி தேடி வருவதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றுக்கு அறிவித்திருந்தனர்.

இந்நிலையிலேயே அவர் நேற்று (30) தனது சட்டத்தரணிகள் ஊடாக நீதிமன்றில் சரணடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »